திருநிலை பெரியாண்டவர் கோவில்

திருநிலை பெரியாண்டவர் கோவில்

சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்த தலம்

செங்கல்பட்டிற்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவிலுள்ள திருநிலை கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாண்டவர் கோவில். இறைவியின் திருநாமம் அங்காள பரமேசுவரி. இந்த தலத்தில் சிவபெருமான், மனித வடிவம் தாங்கி உலகெல்லாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன் பாதம் பதித்து, பெரியாண்டவராய் காட்சி தந்த பின் சுயம்பு லிங்கமாய் கோவில் கொண்டார். இத்தலத்தில் சிவபெருமான் நின்ற கோலம், அமர்ந்த கோலம், தவக்கோலம் என மூன்று வித தோற்றத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். சிவபெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாக அவதாரம் எடுத்ததன் பின்னணி

சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி, பல அரிய வரங்கள் பெற்றான். அவன் பெற்ற வரத்தின்படி, சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் வாழ்ந்தால்தான் அவனை அழிக்க முடியும் என்னும் நிலை இருந்தது. இறைவனின் திருவிளையாடலின்படி, பார்வதி தேவி எம்பெருமான்மேல் கோபம் கொண்டு, ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் பிறப்பீர்கள்! என்று ஈசனை சபித்தாள். அதன் காரணமாக சிவபெருமான் மனிதனாகப் பிறந்து தன்நிலை மறந்து பூமியில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். இதனால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் மனம் கலங்கினர். அவர்கள் அனைவரும் பார்வதி தேவியிடம் சென்று, ஈசனை ஆட்கொண்டு உலகை உய்விக்க வேண்டும் என்று வணங்கி நின்றனர். அதையேற்ற பார்வதி தேவி அங்காள பரமேசுவரியாக பூவுலகம் வந்து, மனம்போன போக்கில் அலைந்து கொண்டிருந்த சிவனைக் கண்டு மனம் வருந்தி, தன் சூலாயுதத்தை ஓரிடத்தில் வீசியெறிந்தாள். அது பூமியில் ஓர் இடத்தில் குத்தி, நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 மண் உருண்டைகள் சிதறி விழுந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி, சுற்றி சிவனின் வருகைக்காகக் காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு சிவபெருமான் அந்த இடத்தில் பாதம் பதித்து, ஒருநிலையாய் நின்றார். அவரை பரமேஸ்வரி வணங்கினாள். அப்போது ஒரு நாழிகைப் பொழுது நிறைவுற, சிவபெருமான் மனித உருவம் நீங்கி தன்நிலை அடைந்தார். பெரிய மனிதராய் உலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிர் பெரியாண்டவர் என்னும் பெயரில் வழங்கப் பெறுவீர்கள் என்று உமாதேவி கூற, தேவர்கள் அனைவரும் பெரியாண்டவரே என்று சொல்லி ஈசனின் பாதங்களைப் பணிந்தனர். அங்கேயே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் திருநிலை.

நந்திதேவர் மனித உடலுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்

சிவபெருமான் மனித அவதாரம் எடுத்தபோது அவருடன் நந்தி தேவரும் மனித வடிவில் சென்றார். எனவே இங்குள்ள நந்திதேவர் மனித உடலுடன் காணப்படுகிறார். இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தத் திருநீற்றைப் பூசி, உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும்; கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

பிரார்த்தனை

இவ்வாலயத்தின் அருகிலுள்ள சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு, சிவபெருமானையும் அம்மனையும் தொடர்ந்து ஆறு வாரங்கள் வணங்கி வந்தால் நடக்காத காரியங்களும் நடைபெறும் என்கின்றனர். மகப்பேறு கிட்ட பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. பல்லாயிரம் பேர் இந்த சிவனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்கள் 21 மண் உருண்டைகளை சிவலிங்கத்தைச் சுற்றி வைத்து வணங்கிச் செல்கின்றனர்.

Read More