சௌரிராஜ பெருமாள் கோவில்
பெருமாளின் திருநெற்றியில் தழும்பு
ஒருநாள்,திருக்கண்ணபுரம் திருக்கோயிலின் அரையர் வந்த போது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோயிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த உற்சவமூர்த்தியைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான் . “டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே” என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டார். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது. அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் வலப்புருவத்துக்கு மேல் ஏற்பட்ட சிறு தழும்பு வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
சௌரிராஜ பெருமாள் கோயில்
மும்மூர்த்தியாக தரிசனம் தரும் பெருமாள்
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் வைகாசி பிரும்மோற்சவத்தின் ஏழாம் நாளன்று, பெருமாள் மும்மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். முதலில் பெருமாளாகவும, அன்றிரவு பிரம்மாகவும், விடியற்காலையில் சிவனாகவும் காட்சி தருகிறார். வேறு எந்த திவ்யதேசத்திலும் இப்படியொரு திருவிழா நடைபெறுவதில்லை.