லோகநாதப் பெருமாள் கோவில்
வசிஷ்ட முனிவரிடம் கிருஷ்ணர் நடத்திய லீலை
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணங்குடி. பெருமாள் திருநாமம் லோகநாதர். உற்சவர் தாமோதர நாரயணன். மேலும் இக்கோவில், பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு கிருஷ்ண க்ஷேத்திரங்கள் திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை ஆகியவை ஆகும்.
வசிஷ்ட முனிவர் கிருஷ்ண பக்தியில் மிக சிறந்தவர். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கிருஷ்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,கிருஷ்ணனை விரட்டி சென்றார்.
திருக்கண்ணங்குடியை 'கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகின்றன. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கிருஷ்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,'வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்' என்றார். அதற்கு ரிஷிகள்,'கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் தங்கிவிட்டார். விரட்டி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. கண்ணன் கட்டுண்டு நின்ற படியால், இத்தலம் 'கண்ணங்குடி' ஆனது.
கருடாழ்வாரின் சிறப்புத் தோற்றம்
எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார்.
குழந்தை வரம் அருளும் தலம்
குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
லோகநாதப் பெருமாள் கோவில்
மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் திவ்ய தேசம்
திருக்கண்ணங்குடி என்னும் திவ்ய தேசம் திருவாரூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இத்தலத்தில் உள்ள மூலவர் திருநாமம் லோகநாதப் பெருமாள். தாயார் லோகநாயகி. உற்ஸவர் தாயாரின் திருநாமம் அரவிந்தநாயகி..திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்னவென்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே முக சாயலில் இருப்பது தான். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. இது வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
லோகநாதப் பெருமாள் கோவில்
பெருமாள் திருநீறு அணிந்து காட்சி தரும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் கோவிலில் தீர்த்தமும், துளசியும்தான் பிரசாதமாகத் தருவார்கள, விபூதி பிரசாதம் தரமாட்டார்கள, திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் 'திருநீரணி விழா’ என்பது சிறப்பான விழாவாகும். சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடைபெறும் இந்த விழாவின் போது, பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை(90 நிமிடம்) நேரம்தான் நடைபெறும். இதற்கு வைணவர்கள் உட்பட அனைவரும் விபூதி அணிந்தே வருவார்கள். பெருமாள் கோவிலில் விபூதி பூசுவது இங்கு மட்டும்தான.சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும். உபரிசரவசு என்ற மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்படுகின்றது, உபரிசரவசு சிறந்த சிவபக்தன. தினமும் விடியற்காலை வேளையில் சிவபூஜை செய்வது அவன வழக்கம். அவன் சித்திரை மாதம் ஒரு நாள் வான்வெளியில் பறந்து வந்து கொண்டிருந்த போது விடியற்காலை நேரம் நெருங்கிவிட்டது. சிவபூஜை செய்வதற்காக அவன் சிவாலயத்தை தேடிக் கொண்டிருந்தபோது, திருக்கண்ணங்குடி பெருமாள் கோவில் அவன் கண்ணில் பட்டது. அதை சிவன் கோவில் என்று தவறாக புரிந்து கொண்டு கோவிலினுள் நுழைந்தான். மன்னனின் சிவபூஜை தவறி விடக் கூடாது என்பதற்காக,பெருமாள் அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை நேரம் சிவபெருமானாக காட்சி தந்து, சிவபூஜை செய்ய அருளினார. பெருமாள், உபரிசரவசுக்கு திருநீறு அணிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்ததைத்தான் இத்தளத்தில், திருநீரணி விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இத்தலத்தில் கருடன் இரண்டு கரங்களையும் கட்டிக்கொண்டு காட்சியளிக்கிறார். இத்தகைய காட்சி வேறு எந்த தலத்திலும் காண முடியாது.