சுப்பிரமணிய சுவாமி கோவில்
தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் முருகன், வள்ளி, தெய்வயானை
திருச்சி நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் லால்குடிக்கு அருகில் உள்ள திண்ணியம் எனும் தலத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் கோடீசுவரர். இறைவி பிருகந்தநாயகி.
இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் நமக்கு முதன்மையாக காட்சி தருபவர் சுப்பிரமணிய சுவாமிதான். பொதுவாக சிவாலயங்களில் ஈசுவரனை தரிசித்த பின்புதான் முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் சன்னதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், முருகனையும் தரிசிக்கும்படி சன்னதிகள் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
மற்ற கோவில்களில் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ முருகப்பெருமான் மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
திருமணப்பேறு, குழந்தை வரம், கல்வி ஞானம் அருளும் முருகன்
இத்தலத்தில் முருகனுடைய வலது கரம், அபயம் காட்டுகிறது. பக்தர்களை காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம் இடது கரம் வரத ஹஸ்தமாக இல்லாமல் அரிஷ ஹஸ்தமாக உள்ளது. அதாவது, பக்தர்களுடைய கஷ்டங்களை தான் வாங்கிக் கொள்ளும் கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களை யெல்லாம் களைகின்றன. இதனால் இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். இக்கோவில் முருகன் சிலை, வண்டியிலிருந்து கீழே சரிந்து இத்தலத்தில் நிலை கொண்டுவிட்டதால், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவோர் விரைவிலேயே சொந்த வீடு, நிலம் வாங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.