பாலமுருகன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பாலமுருகன் கோவில்

பழனி முருகன் போல் தோற்றமளிக்கும் பாலமுருகன்

வத்தலகுண்டுவிலிருந்து 46 KM தொலைவில் உள்ளது தாண்டிக்குடி மலைக்கிராமம் . இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார்.

பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது. பழனி மலை முருகன் சிலையில் இருக்கும் அத்தனை அம்சங்களும் அப்படியே இந்த சிலையில் இருப்பதால், இத்தல முருகனையும், `பழனி முருகன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

தாண்டிக்குதி என பெயர் வந்த கதை

முருகன், கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி வருவதற்கு முன் தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழனி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாக்கிக் கொள்ள ஏற்றது என கருதி தாண்டிக் குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் தாண்டிக்குதி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி தாண்டிக்குடி என ஆனது.

பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றவர் என்பதால் எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முருகப்பெருமானின் கால் தடம்

கோவிலின் அருகில் மலைப் பாறையில், பழனி திருத்தலத்தை நோக்கி கால் தடம் ஒன்று காணப்படுகிறது. இங்கிருந்துதான் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பழனி மலைக்கு முருகப்பெருமான் தாண்டிச் சென்றதாகவும், அதில் ஏற்பட்ட கால் தடம்தான் இது என்று கூறப்படுகிறது.

அதே போல் இந்தப் பாறையில் ஒரு வேலின் தோற்றம், மயிலின் தோற்றம், அனுமனின் தோற்றம், பாம்பின் தோற்றம் ஆகியவை காணப்படுகின்றன. அதை விட சிறப்பு, இங்குள்ள பாறையின் மீது எந்நாளும் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. சுனையில் ஒரு வேல் நடப்பட்டுள்ளது.

குழந்தை வரம் தரும் சுனை தீர்த்தம்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தச் சுனை நீரை எடுத்துச் சென்று சுவாமியின் திருவடியில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் தரப்படும் விபூதி மற்றும் சந்தனத்தை அந்த நீரில் கலந்து அருந்தினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

Read More