தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

பெரிய கருவறை உடைய சிவாலயங்கள்

பொதுவாக கோவில்களில் கருவறையானது ஒரிரு அர்ச்சகர்கள் நின்று தெய்வத்தை பூஜிக்கும் அளவிற்குத்தான் அமைந்திருக்கும். ஆனால், தேவாரப் பாடல் பெற்ற தலங்களான கும்பகோணத்திற்கு அருகே உள்ள இன்னம்பரிலும், பூம்புகார் அடுத்த உள்ள புஞ்சையிலும் ஒரு யானை உள்ளே சென்று வழிபடக் கூடிய அளவில் கருவறை உள்ளது.இத்தகைய பெரிய கருவறை வேறு எந்த சிவாலயத்திலும் இல்லை என்பது இந்தத் தலங்களின் தனிச் சிறப்பாகும். யானை சென்று வழிபடும் அளவு கருவறையை உருவாக்கியது, சோழர்களின் பார்போற்றும் கட்டிடகலை சிறப்பாகும்.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

ஒரே சிவாலயத்தில் இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகிய மூன்று தலங்களுக்கும் ஒரு தனித்துவம் உண்டு.இந்த மூன்று தலங்களில் தான் ஒரு கோயிலுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு சிவன் சன்னதிகள் தேவாரப் பாடல்கள் பாடப் பெற்றுள்ளன.

இதில் திருவாரூர் தலத்தில் வன்மீகநாதர் மற்றும் அசலேஸ்வரர், திருப்புகலூர் தலத்தில் அக்னிபுரீஸ்வரர் மற்றும் வர்த்தமானீஸ்வரர், திருமீயச்சூர் தலத்தில் மேகநாதர் மற்றும் சகலபுவனேஸ்வரர் ஆகிய மூலவர்கள் மேல் தேவாரப் பாடல் பாடப்பட்டிருக்கிறது.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

திருமண தடை நீக்கும் 'மாப்பிள்ளைசாமி' தலங்கள்

மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள திருமணஞ்சேரி , கோனேரிராஜபுரம், திருவீழிமிழலை ஆகிய மூன்று சிவத்தலங்களிலும் உள்ள இறைவனை 'மாப்பிள்ளைசாமி' என்று அழைக்கின்றனர். இவற்றில் அருள் புரியும் இறைவனையும் அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தால் தடைப்பட்ட திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ். புதூரில் இறங்கி கோனேரிராஜபுரம் செல்ல வேண்டும். பிறகு மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து, திருவீழிமிழலைக்குச் செல்ல வேண்டும். நிறையாக கும்பகோணம் மயிலாடுதுறை பாதையில் குத்தாலத்தில் இறங்கி, அங்கிருந்து திருமணஞ்சேரிக்குச் சென்று தரிசித்து வர வேண்டும்.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

முக்தி தரும் தலங்கள்

வைணவ மார்க்கத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருவடியை அடைய 108 திருப்பதிகள் உள்ளன. அது போலவே சைவ மார்க்கத்தில் சிவபெருமானின் திருவடியை அடைய சில சிவாலயங்கள் உள்ளன. நாம் பூமியில் பிறந்து, இல்லற வாழ்வில் ஈடுபட்டு பின்பு, முக்தி என்னும் இறைவனின் திருவடியை அடைய வேண்டும் என்பது இந்து சமயச் சான்றோர்களின் வாக்காகும். அவ்வாறு நாம் பிறப்பு என்னும் பற்றறுத்து, முக்தி என்னும் வீடுபேறு நிலையை அடைவதற்கான தலங்களை இங்கே பார்க்கலாம்.

பிறக்க முக்தி-திருவாரூர்

திருவாரூர் நகரில் ஒருவர் பிறந்துவிட்டாலே முக்தியடைந்து விடலாம் என்ற சிறப்பு கொண்ட தலமாக உள்ளது. இந்தத் திருவாரூர் மண்ணில் ஒரு ஜீவன் பிறந்தாலே நிச்சயமாக அந்த ஜீவனுக்கு முக்தி கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு.

வாழ்ந்தால் முக்தி-காஞ்சிபுரம்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல், திரும்பும் திசையெல்லாம் கோவில்களாகவே காட்சியளிப்பதால், கோவில்கள் நகரம் என்று காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது. நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று மகாகவி காளிதாசர் பாடியிருக்கிறார். இன்னும் எவ்வளவோ சிறப்புகள் காஞ்சி மாநகருக்கு உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் வாய்ந்த காஞ்சியில் வாழ்ந்தாலே ஒரு ஜீவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

தரிசிக்க முக்தி- சிதம்பரம்

பஞ்ச பூத திருத்தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்ச சபைகளில் பொன் சபையாகவும் விளங்குவது சிதம்பரம். தில்லை நடராஜர் கோயில். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பாலயம் என்று திருமந்திரம் அருளிய திருமூலதேவர் சொன்னதைப் போல் மனித உடம்பும், கோயிலும் ஒன்றே என்பதை காட்சிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்முடைய உடம்பானது, அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து வகையான கோசங்களைக் கொண்டது. அதை உணர்த்தும் விதத்தில் இக்கோயிலும் ஐந்து திருச்சுற்றுக்களை கொண்டுள்ளது. நவீன விஞ்ஞானத்தின் அத்தனை ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து தரிசித்த உடனேயே முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும்.

நினைக்க முக்தி- திருவண்ணாமலை

படைப்பு கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது, சிவபெருமான், தானே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டி நெருப்பு பிளம்பாக தோன்றி காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை ஆகும். பஞ்சபூத தலங்களில் தேயு என்னும் நெருப்பு தலமாக விளங்குகிறது. சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக மலை உருவில் காட்சியளிக்கும் இங்கு ஏராளமான சித்தர்கள் இன்றைக்கும் அரூபமாக மலையை வலம் வருவதாக நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தல இறைவனை தரிசிக்க நாம் இங்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. அண்ணாமலைக்கு அரோகரா என்று இருக்கும் இடத்தில் இருந்து பக்திப் பெருக்கோடு வேண்டிக் கொண்டாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்வது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

தீர்த்தமாட முக்தி- திருமறைக்காடு

வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கதவினை திருநாவுக்கரசர் பதிகம் பாடி திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அடைக்கப்படவும் பெருமை பெற்ற தலமாகும். இவ்வூரின் இன்றைய பெயர் வேதாரண்யம் என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் வேத தீர்த்தம் ஆகும். நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து காரணத்தால் இத்தல இறைவனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும் தீர்த்தத்திற்கு வேத தீர்த்தம் என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே, இங்கு வந்து இத்தீர்த்தத்தில் நீராடினாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சொன்னால் முக்தி- திருவாலவாய்

மதுரை நகரின் மற்றொரு பெயர் திருவாலவாய் ஆகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் ஒரே நகரம் இதுதான். மதுரை மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது அன்னை மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் ஆலயம். அன்னை மீனாட்சியம்மனை இங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார மக்கள் அனைவரும் தங்களின் அன்னையாகவே கருதி வழிபட்டு வருகின்றனர். , இங்கு வந்து இக்கோயிலில் உள்ள தல மரத்தை 108 முறை வலம் வந்து, திருவாலவாய சுவாமியை மனதில் நினைத்து மனமுருகி வேண்டினால் மரண பயம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

கேட்க முக்தி- அவினாசி

தேவரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு சிவாலயங்களில் முக்கியமான தலம் அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயம். அவிநாசி என்பதற்கு என்றும் அழியாத என்று பொருள். இத்தல இறைவனை மனமுருகி வேண்டிக் கேட்டால் நாம் கேட்கும் வரத்தை தருவார் என்பது ஐதீகம். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை மனமுருகி வேண்டி கேட்க, அதனால் மனம் உருகிய இறைவன், முதலை விழுங்கிய சிறுவனை மீட்டுக் கொடுத்த தலம் ஆகும். எமன் வாயில் சென்றவனைக் கூட இத்தல இறைவன் மீட்டுத் தருவார் என்பதால், நாம் கேட்கும் வரத்தை அளிக்கும் முக்தி தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இறக்க முக்தி – வாரணாசி

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டது, காசி என்னும் வாரணாசி நகரம். இந்நகரத்தை சிவபெருமானே உருவாக்கினார் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும். வருணா-ஆசி என்னும் இரண்டு நதிகள் சங்கமமாகும் இடம் என்பதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. காசி என்றால் ஒளி என்று அர்த்தம். நாம் வாழும் போது மட்டுமில்லாமல் நாம் இறந்த பின்னும் பிறவா நிலை என்னும் முக்தியை அளிக்கும் நகரமாக அமைந்துள்ளது. காசியில் இறந்தால் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். அதனால் இங்கு இறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும்போது சிவபெருமானே அவற்றின் காதுகளில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

காசிக்கு சமமான சிவ தலஙகள்

இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க நினைப்பது காசி விஸ்வநாதர் கோவில்தான். அதிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் தங்களின் இறுதிக்காலத்தை காசிக்கு சென்று இக்கோவிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானை தரிசித்து கங்கைக் கரையிலேயே தங்களின் இறுதி நாட்களை முடித்துக்கொள்ள ஆசைப்படுவதுண்டு. தமிழகத்திலும் காசிக்கு நிகரான கோவில்கள் உள்ளன.

"ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம் சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ஷேத்திர ஸமான ஷட்" என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகமும் உண்டு. அதன்படி திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) என்ற இந்த ஏழு சிவன் கோவில்களும் காசிக்கு சமமான கோவில்களாகும். இங்கு சென்று வழிபட்டால், காசிக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

Read More