பாப்பாரப்பட்டி அபீஷ்ட வரதராஜர் கோவில்
பெண் வடிவில் நவக்கிரகங்கள் இருக்கும் அபூர்வ காட்சி
தருமபுரியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது அபீஷ்ட வரதராஜர் கோவில். இக்கோவில் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பொதுவாக நவக்கிரகங்கள் சிவாலயங்களில் மட்டுமே எழுந்தருளி இருப்பார்கள். பெருமாள் கோவில்களில் அவர்களை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் இந்தப் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். அதோடு அந்த நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.. வேறு எந்த தலத்திலும் நாம் பெண் வடிவிலான நவக்கிரகங்களை தரிசிக்க முடியாது.
கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில்.
பெருமாளுக்கு பொரிகடலை மாவு நைவேத்தியம்
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைந்துள்ளது கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில். கருவறையில் மூலவர் சென்னகேசுவரப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சென்னகேசுவர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப் போன்றே காட்சி தருகிறது. பொதுவாக பெருமாள்கோவில்களில் பைரவர் இருப்பதில்லை. ஆனால், இந்தக் கோவிலில் மூலவருக்கு அருகாமையிலேயே பைரவர் குடி கொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் காட்சி தருகிறார். ஆகையால், இந்த ஆஞ்சநேயர் வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர்
பதினேழாம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இந்த ஊர் இருந்த போது இந்தக் கோயிலுக்கு மைசூர் மன்னர்களால், ஸ்ரோத்ரியம் எனப்படும் மானியம் வழங்கப்பட்டது. ஆகையால் இந்த ஊஞக்கு ஸ்ரோத்ரியம் கோவிலூர் என்று பெயர் ஏற்பட்டது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வர் பெருமாளிடம் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தனர். அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர். இவரை திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர் என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் விதவிதமான நைவேத்தியங்கள் செய்யப்படும். ஆனால் இக்கோவிலில் வித்தியாசமாக, பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிமாவு கடலையை நைவேத்தியமாக படைக்கிறார்கள்
பிரார்த்தனை
கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத் தடை நீங்கவும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் இந்தக் கோவில் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
அந்தரத்தில் தொங்கும் 2000 கிலோ எடையுள்ள அதிசய கல் தூண்
தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் கல்யாண காமாட்சி கோவில். இந்த கோயில் கோட்டை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.
சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை 2000 கிலோ. இதனால் இத்தூண் 'தொங்கும் தூண்' என்று அழைக்கப்படுகின்றது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது . மண்டபத்தின் விதானத்தில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே கால் மாறி ஆடும் நடராஜர் அருள்புரிகிறார். மதுரையை அடுத்து இந்த தலத்தில் தான் நடராஜரின் கால்மாறி ஆடும் கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும்.
ஸ்ரீசக்கரத்தின் மீது எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது, ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்ப வடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கோவிலின் வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனுக்கும் அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
ஆடிமாதம் மூன்றாவது செவ்வாய் மட்டுமே சுயரூப காட்சி தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை
தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கல்யாண காமாட்சி கோவில். தருமர் வழிபட்டதால் இந்த தலத்திற்கு தருமபுரி என்று பெயர். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.
அம்பாள் கல்யாண காமாட்சி கருவறையின் அருகில், அர்த்தமண்டபத்தில் சிறிய தனிச்சன்னதியில் அம்பிகை சூலினியின் இராஜதுர்காம்பிகை வடிவம் கிழக்குநோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர், இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட துர்க்கை இவள்.
துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி இருந்தால் அவளை சூலினி துர்க்கை என்பார்கள். இத்தலத்தில் துர்க்கை, சூலினி ராஜ துர்காம்பிகையாக சூலம் சங்கு ஏந்தி மகிஷாசுரனை வதம் செய்யும் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். கீழே விழுந்து கிடக்கும் மகிஷனின் கொம்பை இடதுகரத்தால் பிடித்துக்கொண்டு வலதுபாதத்தால் அவன் கழுத்தை மிதித்துக்கொண்டு, காரணம் , காரணி, அதன் பலன் என மூன்று வகையில் மூன்று வகை சூலங்களுடன், சம்கார தோற்றத்தில் காட்சி தருகிறாள். இது தமிழகத்தில் சூலினிக்கான ஒரே கோயிலாகும்.
சூலினி ராஜ துர்காம்பிகையின் முழு தரிசனம், வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நமக்குக் கிட்டும். மற்ற நாட்களில் திரையிடப்பட்டு திருமுக மண்டலத்தை மட்டுமே தரிசிக்க முடியும். சூலினி ராஜ துர்காம்பிகையின் சுய ரூபத்தை, முழு உருவை சந்தனக்காப்பு அலங்காரத்தில் , வருடத்தில் ஆடி மூன்றாவது செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும்.
பிரார்த்தனை
சங்கு சக்ரம் ஏந்தி மகிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். ராகு கிரக அதிதேவதையான ஸ்ரீ சூலினி ராஜ துர்கையை, கிருஷ்ணரின் ஆலோசனைப்படி வழிபட்டு தருமர் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற்றார். செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுகிறாள்.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
ஸ்ரீசக்கரத்தின் மீதே சன்னதி எழுப்பப்பட்ட தனிச்சிறப்புடைய கல்யாண காமாட்சி
தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையான இடத்தை பெறுகிறது கல்யாண காமாட்சி கோவில். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி. 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவில், ஒரு தேவார வைப்பு தலமாகும் .
கருவறையில் சுயம்பு மூர்த்தியாக இறைவன் மல்லிகார்ஜுனேஸ்வரர் 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் எழுந்தருளி இருக்கிறார். இது சிவாகமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது.
அம்பாளின் சன்னதி ஈசனின் சன்னதியை விட உயரமாக உள்ளதால், 18 படிகள் ஏறித்தான் அன்னையை தரிசிக்கவேண்டும். இங்கு அம்பாள் கல்யாண காமாட்சி, சிவசக்தி ஐக்கிய சொரூபமாக , பிரம்மா விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் நான்கு கால்களாக, சதாசிவர் மேற்பலகையாக இருக்கும் பஞ்ச பிரம்ம ஆசனத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு, நான்கு கரங்களோடு, அபய வரத ஹஸ்த கோலத்தில் அருள் புரிகிறாள். மாங்காட்டில் தபசு காமாட்சியாகவும் , காஞ்சிபுரத்தில் யோக காமாட்சியாகவும் , இத் தகடூரில்( தர்மபுரி) ஐக்கிய காமாட்சியாகவும் காட்சி தருகிறாள்.
பதினெட்டு கல்யாண குணங்களை நாம் கடைபிடித்தால்தான் கல்யாண காமாட்சியின் அருளும் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்துகின்றன. இந்த 18 படிகளையும் மலர்களால் அலங்காரம் செய்து மஞ்சள் குங்குமமும் இட்டு புடவைச்சாத்தி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில், சிற்பவடிவில் 18 யானைகள், தங்களின் தலையின் மேல் அம்பாளின் சன்னதியை தாங்கிக் கொண்டு இருக்கின்றன.
அமாவாசையன்று பெண்கள் மட்டுமே நடத்தும் திருப்படி பூஜை
ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும், பெண்கள்தான் பதினெட்டுத் திருப்படிகளிலும் திருப்படி பூஜை செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாது அம்மனின் உற்சவ திருமேனியை சுமந்து, திருப்பாதம்தாங்கிகளாக, திருக்குடை ஏந்தியவர்களாக கோவிலினுள்ளே வலம் வருவதும் பெண்கள்தான். இது எந்த கோவிலிலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் அம்பிகைக்கு முதலிடம் கொடுப்பதாலும், ஆலய அமைப்பு தாய்மையின் பெருமையை உணர்த்துவதாலும், ( தாய்மண், தாய்மொழி என்று கூறுவது போல) தாய்க்கோவில், மாத்ரு மந்திர் என்று போற்றப்படுகிறது.
பிரார்த்தனை
இந்த அம்பிகை, கல்யாண காமாட்சி என்று போற்றப்படுவதற்கான சிறப்பு என்னவென்றால், ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, திருமண வரம் வேண்டுவோர், ஐந்து அஷ்டமி தினங்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், திருமணத் தடை அகல்வதற்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தேய்பிறை அஷ்டமியில் காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரை கல்யாண மாலை பூஜை செய்து, கால பைரவர் சந்நிதியில் கந்தர்வ ராஜ கல்யாண மாலை தருகிறார்கள்.
அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோவில்
தனது திருமேனியில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் கொண்ட தட்சிண காசி காலபைரவர்
தர்மபுரி - சேலம் சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது கால பைரவர் கோவில். இந்தியாவில் 2 காலபைரவர் கோயில்கள் மட்டுமே உள்ளன. 'ஒன்று காசி கங்கைக்கரையில். இரண்டாவது அதியமான் கோட்டையில்' உள்ள தட்சிண காசி காலபைரவர். காசிக்கு அடுத்தபடியாக இக்கோவில் போற்றப்படுவதால், தட்சிண காசி கால பைரவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இந்தத் தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.
வள்ளல் அதியமான் கட்டிய கோவில்
ஔவைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்த, கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமான்தான் இங்குள்ள தட்சிண காசி காலபைரவர் கோவிலைக் கட்டினார். அதியமான், தனக்கு பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்க தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி, சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றான, காவல் தெய்வமான கால பைரவர்தான் என்றும் நினைத்தார். அதனால் கால பைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார். காலபைரவர் சிலையை காசியிலிருந்து கொண்டு வந்து தான் கட்டிய கோவிலில் பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் கருவறை விதானத்தில் நவகிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவகிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்கவேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான் அதியமான் மன்னர் நவகிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. 64 வகை பைரவர்களும் ஒரே சொரூபமாக, 'உன்மத்திர பைரவராக' அருள்பாலிக்கும் இவர் திருமேனியில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் இருக்கின்றன. கோவில் உட்கூரையில் 9 நவகிரகங்களும் சக்கரம்போல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அதியமான் கோட்டையின் சாவி கூட காலபைரவரின் கையில்தான் இருக்கும். தனது நாட்டைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவர் கையில் திரிசூலத்துடன் சேர்த்துப் போர் ஆயுதமான வாளும் வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்.
பிரார்த்தனை
மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை, மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பு பிரசாதம்
பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பது, திருச்சி குணசீலம் பெருமாள் கோயில் போல், இங்கேயும் நடைபெறுகிறது. இதனால், பில்லி, சூனியம் முதலான துஷ்ட சக்திகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் யாவும் அகலும் என்பது ஐதீகம்.
தர்மபுரி மக்கள் மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தட்சிண காசி கால பைரவரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.