சித்தாத்தூர் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சித்தாத்தூர் மாரியம்மன் கோவில்

சிரசு வடிவில் மூன்று அம்மன்கள் எழுந்தருளியிருக்கும் தலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சித்தாத்தூர் மாரியம்மன் கோவில். ஊருக்கு வெளியே வயல்வெளிகளின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கருவறையில், மாரியம்மன் சுதை வடிவில் அமர்ந்து இருக்கின்றாள். அவளுக்கு கீழே சிரசு வடிவில் மூன்று அம்மன்கள் வீற்றிருக்கின்றார்கள். இவற்றில் வலப்புறம் இருப்பவள் வயல்வெளியில் கிடைத்த அம்மனாகும். பார்வதிதேவியின் சொரூபமாக அருள்பாலிக்கும் இந்த மாரியம்மன் கோவிலில், சித்தர்கள் பலர் இன்றும் இரவில் வந்து அம்மனை வழிபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த அம்மனுக்கு எட்டியம்மன் என்ற பெயரும் உண்டு.

தல வரலாறு

திருவண்ணாமலை மாவட்டம் அம்மன் கோவில்களில், படவேடு ரேணுகாம்பாள் மிகவும் பிரசித்தி பெற்றவள். அந்த அம்மனின் அம்சமாக சித்தாத்தூர் மாரியம்மன் கருதப்படுகின்றாள். சித்தர்களின் பூமியாக கருதப்படும் இந்த சித்தாத்தூரில், ஒரு சமயம் அன்னை ரேணுகா தேவி கோயில் கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் இங்கே நாகமாக உலவித் திரிந்தாள். ஒரு நாள் நாகமாக சுற்றி வந்த அம்பிகையின் நாவில் முள் தைத்துவிட்டது. அப்போது வாழைப்பந்தல் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர் பனை மரத்தடியில் தன் மாட்டை கட்டி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த நாகம்,'நானே அன்னை ரேணுகாதேவி. நாக வடிவில் வந்து இருக்கின்றேன். என் நாவில் முள் தைத்துவிட்டது. அதை எடுத்து விடுவாயா?'என்று கேட்க, உடனே அந்தப் பெரியவர் எந்தத் தயக்கமோ, பயமோ இல்லாமல் அந்த நாகத்தின் நாவில் இருந்த முள்ளை எடுத்துவிட்டார். படமெடுத்து ஆடிய அந்த நாகம், அவருடைய வம்சத்தையே தான் காத்தருள்வதாக வாக்களித்துவிட்டு மறைந்தது. பின்னர் அந்தப் பெரியவர் குடும்பத்தோடு இங்கே வந்து வாழ ஆரம்பித்தார். நாக உருவில் முதலில் இங்கே வாழ்ந்த அன்னை ரேணுகா தேவி, பல காலத்துக்கு முன்பே கற்சிலையாக மண்ணுள் புதையுண்டு கிடந்தாள். வயலில் ஏர் உழும்போது ஏர் கலப்பையில் தட்டுப்பட்டு, வெளியே கொண்டுவரப்பட்டாள். பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெரியவரின் வம்சாவளியினர் இன்றும் இங்கு வரும்போது அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, குறைவின்றி வாழ்கின்றனர்.

பக்தர்கள் கனவில் பாம்பாகத் தோன்றும் மாரியம்மன்

இந்த அன்னை பக்தர்கள் கனவில் தோன்றி பொங்கல் வழிபாடு செய்யும்படி அறிவுறுத்துவாளாம். அதை மறந்து விட்டால் பாம்பாகத் தோன்றி நினைவு படுத்துவாளாம். உடனே அவர்கள் சித்தாத்தூர் வந்து, அன்னையை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுவார்களாம். இது இன்றும் நடைமுறையில் நடக்கின்றது. தமிழகமெங்கும் பலருக்கும் குலதெய்வமாக இந்த அன்னை திகழ்கின்றாள். இந்த அம்மனின் அருள் செயலால் தங்கள் வாழ்வில் அற்புதங்களையும், திருப்பங்களையும் சந்தித்த பக்தர்கள் ஏராளம்.

பௌர்ணமிதோறும் இங்கு அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் நடத்தி அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விமரிசையாக திருவிழா எடுக்கின்றனர்.

Read More