மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில்

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில்

பசுவின் கொம்பைப் போல் காட்சியளிக்கும் அபூர்வ சிவலிங்கம்

கிழக்கு தாம்பரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ​மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தேனுகாம்பாள். கருவறையில் மூலவர் தேனுபுரீஸ்வரர் , காமதேனு பசுவின் கொம்பு வடிவில் காட்சி அளிக்கிறார். சதுர ஆவுடையாரின் நடுவில் மூன்று அங்குல அகலமும், எட்டு அங்குல உயரமும் கொண்டு, சிறிய மூர்த்தியாக இந்த தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஈசன் பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும், பசுவின் கொம்பைப் போல் தரிசனம் அளிக்கும் இந்தக் காட்சி​ அபூர்வமானது. சிவலிங்கத்தின் மீது பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலைக் கட்டியவர் ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நடைபெறும் சரபேஸ்வரர் பூஜை

இக்கோவில் மண்டபத்தில் உள்ள 18 தூண்களும் அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. கையில் வீணையுடன் விநாயகர், கையில் சேவலுடன் யானையின் மீது அமர்ந்து இருக்கும் முருகன், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதத்தை தொட்டு வணங்கும் அஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய தூண் சிற்பங்கள் விசேஷமானவை.

ஒரு தூணில், உக்கிர சரபேஸ்வரர் சிலை உள்ளது. தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாளுக்கு அடுத்தபடியாக,இந்தக் கோயிலுக்கு சரபேஸ்வரரை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மரின் கோபம் தணிப்பதற்காகவே, சிவபெருமான் சரபேஸ்வரர் திருவுருவம் எடுத்தார் என்கிறது தல புராணம். சரபேஸ்வரர், நரசிம்மனை கீழே சாய்த்து அவரது கோபத்தை அடக்கும் நிலையில் காட்சி தருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் (4.30 முதல் 6 மணி வரை), சரபேஸ்வரருக்கும் உத்ஸவ மூர்த்தியான சரபேஸ்வரருக்கும் அபிஷேகங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. நரசிம்மரைப் போலவே, சரபேஸ்வரருக்கும் பானக அபிஷேகம் மிகவும் விசேஷம். சரபேஸ்வரரை வணங்கினால் எதிர்ப்புகள் விலகும், தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது ஐதீகம். கிரக, நாக தோஷம் உள்ளவர்களும் இங்குள்ள சரபேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலம்

அருணகிரிநாதர் இத்தலத்தை மாடையம்பதி என்று தமது திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார். இத்தலத்துக்கு அருகே சித்தர்கள் வாழ்ந்த இடம், முற்காலத்தில் சித்தர் பாக்கம் என்றிருந்தது. இப்போது சித்தல பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. ​

Read More