கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன்
இந்தியாவின் தென்கோடி முனையில், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி (குமரி சக்தி) பீடம் ஆகும்.. இந்த அம்மனுக்கு துர்க்கை, பகவதி என்னும் பெயர்களும் உண்டு. பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயங்களில், கன்னியாகுமரியும் ஒன்று என்பது ஐதிகம். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி, நாகரத்தினத்தால் ஆனது.
தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.
இந்தத் தலத்துக்குத்தான் ராமர் முதலில் வந்து வணங்கி,சீதையை மீட்க இங்கிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முயன்றார். அதன்பின் தேவியின் உத்தரவின்பேரில் வானரசேனையோடு ராமேசுவரம் சென்று அங்கு பாலம் அமைத்தார் என்கிறது தலவரலாறு.
இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். இந்த ஆலயத்துக்கு வந்து கன்னிப்பெண்கள் வேண்டிக்கொண்டால் விரும்பியபடி கணவன் அமைவான் என்பது நம்பிக்கை. காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்
மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை . ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது . துர்கை அம்மனின் ரௌத்திர கோலம்தான் சாமுண்டீஸ்வரி அம்மன். 51 சக்தி பீடங்களில், இத்தலம் சம்பப்பிரத பீடம் ஆகும். சாமுண்டீஸ்வரி அம்மன் இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் இவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும், மகா சக்தி என்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.
முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது, மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு. சாமுண்டி மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் மகிஷாசுரன் நிற்கிறான்.
கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மன் மூல விக்கிரகம் தங்க மூலாம் பூசப்பட்டது . மூலத்தான கதவுகள் வெள்ளியிலானது . அம்மனின் காலடியின் கீழ் மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திரிசூலத்தால் அம்மன் இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள். மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மைசூர் ராஜ வம்சத்தின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன். 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். 'நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா' என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி, கோவிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோவில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா
சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூரை ஆண்ட உடையார் மன்னர்கள், போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது தசரா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இத்தலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லருள் பெறலாம் என்பது ஐதீகம்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்
ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன்
பாண்டிய நாட்டு 14 தேவாரத் தலங்களில் ஒன்று ராமேசுவரம். இறைவன் திருநாமம் ராமநாதசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி, மலைவளர்காதலி. பர்வதத்தின் (பர்வதம்=மலை) மகள், பர்வத வர்தினி ஆனாள். 'வர்தன' என்னும் சொல்லுக்கு 'வளர்ச்சி, விரிவு' என்னும் பொருள்கள் உண்டு. பர்வத அரசர் (ஹிமவான்) வளர்த்த மகளாக, பர்வத வம்சத்தின் விரிவாக ஓங்கி நிற்பவளுக்குப் பர்வதவர்தினி என்பது திருநாமம். மலையத்துவச மன்னர் (ஹிமவான்) வளர்த்த மகள் என்பதைக் குறிப்பதாக இந்த அம்பிகையை மலைவளர் காதலி (மலை வளர்த்த பாசத்திற்குரியவள்) என்றே திருஞானசம்பந்தரும், தாயுமானவரும் அழைக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி பீடம்.
சுவாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோல நாயகியாக, நான்குத் திருக்கரங்களுடன் அம்பிகை காட்சி தருகிறாள். கீழ்க்கரங்கள் அபயமும், வரமும் காட்ட, மேல் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு இவள் நிற்பதைப் பார்த்தால், 'நானிருக்கிறேன், கவலைப்படாதே' என்று கூறுவது போன்றே தோன்றுகிறது. தாமரை மலர்களைத் தாங்கியவள் என்பதாலோ என்னவோ, நவராத்திரி காலத்தில் தாமரைச் செல்வியான மகாலட்சுமிக் கோலத்திலும் அம்பிகை காட்சி தருவது வழக்கம். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது.
அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
அம்பிகை பர்வதவர்தினியிடம் வேண்டிக்கொண்டால், எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிக் கொடுப்பாள் என்பது பக்தர்களின் நெடுங்கால அனுபவம்.
பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.
திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
திருஈங்கோய்மலை மரகதாம்பிகை அம்மன்
திருச்சி - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில், மலையின் மேல் அமைந்துள்ள தேவாரத் தலம், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோவில். மலைமேல் அமைந்த வெகு சில தேவாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. சுமார் 500 படிகள் ஏறினால் கோவிலை வந்தடையலாம். அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. இத்தலத்து இறைவன் திருநாமம் மரகதாசலேசுவரர், ஈங்கோய்நாதர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். கருவறையில், அம்பாள் நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கின்றது.
மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின், முனபின் நாடகளில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் லிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.
பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் வணங்க மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக் கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை 'சக்திமலை' என்கின்றனர்.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.
ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்
ஸ்ரீகாளஹஸ்தி ஞானப் பூங்கோதை அம்மன்
சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில். இறைவன் திருநாமம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர். இறைவியின் திருநாமம் ஞானப் பூங்கோதை. இந்த அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, வண்டார்குழலி என்ற பெயர்களும் உண்டு. 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞான பீடம் ஆகும். பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண(தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.
கயிலாச கிரி மலையடிவாரத்தில், சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்பாள் ஞானப் பூங்கோதை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பாள் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இடுப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தங்கப்பாவாடை சாற்றப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்றழைக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் ஞானப் பூங்கோதையை நேரிலோ, நினைத்தோ வழிபட்டால் அம்பிகையின் திருவருள் கைகூடி சகல அஞ்ஞானங்களும் நீங்கும். மேலும் ஞானகாரகனாம் கேதுவின் திருவருள் கிட்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன்
அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். மீனாட்சிஅம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது.
இத்தலத்தை பொறுத்தவரை பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார். மதுரையில் மீனாட்சிக்கே முதல் மரியாதை. இங்கு மீனாட்சி அம்மனை முதலில் வணக்க வேண்டும். பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். பொதுவாக சிவாலயங்களில் முதலில் இறைவனுக்கு நைவேத்யம் செய்தபிறகு, அதையே தான் சுவாமியின் பிரசாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாட்சிக்கு முதலில் நைவேத்யம் செய்துவிட்டு, பின்னர் சுந்தரேஸ்வர் உட்பட பிற மூர்த்திகளுக்கு நைவேத்யம் செய்வார்கள்.
மீனாட்சி அம்மனின் ஆபரணங்கள்
மீனாட்சி அம்மனின் மாணிக்க மூக்குத்தி மிகவும் பிரசித்தம். அது போன்றே மீனாட்சி அம்மன் திருவிழாக்காலங்களில் அணியும் பல நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன், சுவாமிக்கு பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில் ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். இவை திருவிழா காலங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. அவைகளில் சில - பாண்டிமுத்து, முத்து சொருக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்துமாலைகள், முத்து கடிவாளம், பெரியமுத்து மேற்கட்டி, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள், முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள். தலைப்பாகை கிரீடம், திருமுடி சாந்து, பொட்டுக்கறை, பவளக் கொடி பதக்கம், ரோமானிய காசு மாலை, நாகர் ஒட்டியாணம், நீலநாயகப் பதக்கம், திருமஞ்சன கொப்பரை (வெள்ளி), தங்க காசுமாலை, தங்க மிதியடிகள், பட்டாபிஷேக கிரீடம், ரத்தின செங்கோல்.
அம்மனின் தங்க கவசம் - 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது. தங்க கவசத்தை அம்மனுக்கு சாத்தினால், அழகிய புடவை அணிந்திருப்பது போல் தோன்றும்.
ரத்தின செங்கோல் - இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை, கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது.
வைர கிரீடம்
1972ல் திருப்பணி நடத்தியபோது வைர கிரீடம் உருவாக்கப்பட்டது. வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம்.
விக்டோரியா மகாராணி பார்வைக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய நீலநாயகப் பதக்கம்
நீலநாயகப் பதக்கம் மன்னர் திருமலை நாயக்க மன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது. நீலநாயகப் பதக்கத்தை ஒரு தடவை ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி மதுரைக்கு வந்திருந்தபோது பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். உடனே அந்தப் பதக்கத்தை அவர் தமது தாயார் விக்டோரியா மகாராணிக்குக் காட்ட வேண்டுமென்று சொல்லிக் கையோடு எடுத்துக் கொண்டு இங்கிலாந்து போனார் . எடுத்துக் கொண்டு போனவர் அதை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பத்திரமாகத் திருப்பியும் அனுப்பி விட்டார்.
பீட்டர் பாடுகம்
அம்மனின் திருவடிகள் தாங்கும் தங்க மிதியடிகள்-ஒன்றின் எடை 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது. இந்த மிதியடிகளை, சிறுமி வடிவில் வந்து தன் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மனுக்கு ரவுஸ் பீட்டர் (1812-1828) என்ற ஆங்கிலேய கலெக்டர் காணிக்கையாக அளித்தார். பின்னர் கோவில் நிர்வாகம் அவரது பெயரை, காலணிகளின் அடியில் 'பீட்டர் பாடுகம்' என்று செதுக்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். மேலும் மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்) அம்மனுக்கு அளித்தார்.