கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில்
பெருமாளை, பிரம்மா மனித முகத்துடன் (ஒரே தலையுடன்) வணங்கி நிற்கும் அபூர்வ காட்சி
மதுரை - சென்னை நெடுஞ்சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ள கொடிக்குளம் விலக்கு என்ற இடத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில். இக்கோவில் யானைமலை யோக நரசிம்மர் கோவிலுக்கு 2 கி.மீ. அருகாமையில் உள்ளது.
புராணத்தின் படி, மது மற்றும் கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிவிட்டதால், படைப்புத் தொழில் நின்று போனது. மகா விஷ்ணு அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார். ஆனால் பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று மீண்டும் படைப்புத் தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் அந்தணராக, ஒரு தலையுடன் வந்து தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை திருப்பி தந்தார்.
அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, மகா விஷ்ணு வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார்
மூலவர் வேதநாராயணன், கருவறையில் தாயார்கள் இல்லாமல் எழுந்தருளி உள்ளார். வேதநாராயணப் பெருமாள் அருகில், அந்தணராக வந்து தவம் செய்த பிரம்மா ஒரு தலையுடன், பெருமாளை வணங்கியபடி இருப்பது வித்தியாசமான காட்சியாகும்.
ஸ்ரீரங்கம் உற்சவர் நம் பெருமாள் 48 ஆண்டு காலம் மறைந்திருந்த தலம்
பதினான்காம் நூற்றாண்டில் அந்நியர்கள் படையெடுத்து வந்தபோது, ஸ்ரீரங்கம் உற்சவரான நம்பெருமாளை இக்கோவிலுக்கு அருகில் உள்ள குகையில்தான் 48 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தார்கள். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது.
தோல் நோய்களை தீர்க்கும் பிரம்ம தீர்த்தத்து நீர்
இக்கோவில் தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தின் நீரை வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீரில் கலந்து குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.