சண்முகநாதர் கோவில்
கேட்ட வரத்தைக் கொடுக்கும் குன்றக்குடி குமரன்
காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலிருக்கிறது குன்றக்குடி. ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், குடைவரைக் கோவிலில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
தனித்தனி மயில் வாகனங்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
மலைக்கோயில் கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, முருகப்பெருமான் சண்முகநாதர் என்ற திருநாமத்துடன், அழகிய மயில்மீது கம்பீரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருளாசி தருகிறார். முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் மயில் வடக்குப் பார்த்திருக்கிறது. ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும் தெய்வானையும் வீற்றிருக்கிறார்கள். இதுபோன்ற மூன்று மயில் வாகன தரிசனம் காண்பதற்கரியது. முருகனின் மயில் வாகனமும், முருகப்பெருமானை சூழ்ந்திருக்கும் திருவாசியும், மூலவர் மூர்த்தமும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.
மயில் வடிவில் தோன்றும் குன்றக்குடி மலை
ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்படி வந்தவர்கள் வணங்கிவிட்டு அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலிடம் 'முருகப்பெருமானின் வாகனமாக மாறவேண்டி சூரபதுமன் தனது தம்பியருடன் காஞ்சிபுரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்' என்ற விஷயத்தை கூறிச் சென்றுவிட்டார்கள். எங்கே தனக்கு பதிலாக சூரர்கள் முருகப்பெருமானை சுமக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிடுவார்களோ என்று தேவமயில் வருந்தியது. இதனால் தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும்விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.
சூரபதுமனும் அவனுடைய சகோதரர்களும் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலைவிட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொவினதால் மயில் கோபம் அடைந்தது அன்னத்தையும் கருடனையும் மயில் விழுங்கி விட்டது. நான்முகனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும் கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிவை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து குன்றக்குடிக்கு வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்கது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். சாபம் நீங்கப் பெற்ற மயில், 'முருகப் பெருமான் தொடர்ந்து அதே இடத்தில் எழுந்தருளி, வேண்டி வந்து வணங்குபவர்க்கு எல்லா வரமும் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது.பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றம் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தருகிறார்.; மிகவும சிறப்பு வாய்ந்த இக்கோயில் திருப்புகழ் பாடன் பெற்ற திருத்தலமாகும்.
சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைத் தலம்
இக்தலம் தமிழ்நாட்டிலுள்ள, பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. குன்றக்குடி பெருமான் அருளாசி வழங்குவதிலும் தாராளச் சிந்தனைகொண்டவர். ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு கடுமையாக பாதித்த பெரிய மருதுபாண்டியரை காத்து ரட்சித்தவர் நோய்கள், துன்பங்கள் நீங்கவும், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி அறிவு, செல்வம் விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப் பெறவும் இக்கலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள் குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழ் பேச்சு வழக்கில் பரவியுள்ளது இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது எதிரிமறையாக வலியறுக்கப்படுகிறது.