கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
திரிபங்கி நிலையில் காட்சியளிக்கும் விசித்திர வடிவ நரசிம்மர்
திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது, பிரசித்தி பெற்ற கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது. இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்னும் சிறு குன்றிலும் உள்ளன. மூன்றாவதாக, கீழப்பாவூரில் மட்டுமே சமதளப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச் சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இதனை ஒட்டி பின்புறத்தில் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தமிழகத்தில் இத்தலத்தில் மட்டும்தான், திரிபங்க நிலையில் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுத்ததால் அவரது உக்கிரகத்தைத் தணிக்க அவரது சன்னிதி முன்பு மாபெரும் தெப்பக்குளம் உள்ளது சிறப்பு. இது நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
மகாவிஷ்ணு, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த நரசிம்ம அவதார காலம் இப்பூவுலகில் (அகோபிலத்தில் ) இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்தது. 'மற்ற அவதாரங்களைப் போல், நரசிம்ம அவதாரம் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லையே' என்ற எண்ணம் மகாவிஷ்ணுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்வதற்கும்,தன்னை நோக்கி தவமிருந்த ரிஷிகளுக்கு நரசிம்ம தரிசனம் தருவதற்காகவும் இத்தலத்தில், கிருதயுகத்தில் அகோபிலத்தில் எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடனுடன் எடுத்து, மகா உக்கிர மூர்த்தியாக பதினாறு திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்து அடிக்கடி சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவருடைய முழு அருளுக்குப் பாத்திரமாகலாம். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்ட திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும், போன, இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும்.