கீழக்குறிச்சிப்பட்டி பொன்னழகி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கீழக்குறிச்சிப்பட்டி பொன்னழகி அம்மன் கோவில்

உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு, தலையில் கோழி இறகை வைத்து வழிபடும் விநோத திருவிழா

நமது கிராமங்களில் நடக்கும் திருவிழா ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. அங்கே நடக்கும் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு அர்த்தம் உண்டு. மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வருதல், கண்மலர் காணிக்கையாக்குதல், பொங்கலிடுதல் என எத்தனையோ நேர்ச்சைகளை, பக்தர்கள் பயபக்தியுடன் செய்வர். இதற்காக, 16 முதல், 41 நாட்கள் முன்னதாகவே விரதமிருக்க துவங்கி விடுவர். சில ஊர்களில் விழாவுக்கு ஒரு வாரம் முன், கோவில்களில் கால்நாட்டு என்னும் சடங்கு நடக்கும். மற்றும் சில ஊர்களில், காப்பு கட்டுவர். அதன்பின், பக்தர்கள் தேவையற்ற வெளியூர் பயணத்தை தவிர்த்து விடுவர்.

கிராமப்புற கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் வித்தியாசமான பழக்கவழக்கங்களும், விநோத வழிபாடுகளும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியில் உள்ள பொன்னழகி அம்மன் கோவிலில் வருடந்தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் கீழக்குறிச்சிபட்டி, செல்லியம்பட்டி, மேட்டாம்பட்டி, தேவன்பட்டி, கருப்புக்குடி,கொள்ளுப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, வார்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

பங்குனி திருவிழாவை ஒட்டி பொன்னழகி அம்மனுக்கு ஆடு, சேவல் பலியிட்டு பொங்கல் வைத்து, தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சேறு பூசும் நிகழ்ச்சி நடைபெறும். கோவில் அருகே உள்ள கண்மாயில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றை பூசிக் கொள்வார்கள். தொடர்ந்து மாலை அணிந்து, தலையில் கோழி இறகை வைத்துக் கொண்டு, சாமி ஆட்டத்துடன் அம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள். இவ்வாறு வழிபட்டால் உடல் ஆரோக்கியம் கிடைப்பதுடன், இப்பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் குடும்ப உறவுகள் மேம்படவும், நினைத்த காரியங்கள் கைகூடவும் இந்த திருவிழா உதவுவதாக ஐதீகம்.

விநோதமாக இருந்தாலும் பாரம்பரியமாக இந்த திருவிழாவை, இக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்

Read More