கார்த்திகை சோமவார விரதம்
கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்புகள்
திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் என்னும் திருநாமமும் உண்டு. சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சோமவார விரதமும் ஒன்று.
பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.
சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார். சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்ட பார்வதிதேவிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று 'பெருமானே! சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன?' என்று பரமனிடமே கேட்டாள் பார்வதிதேவி. 'தேவி! சந்திரன் எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும், தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி, தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினார்கள்.
குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன் கார்த்திகை சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சில கோவில்களில் 108 சங்காபிஷேகமும், 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். திருவிடைமருதூர், திருக்கடவூர், திருநாகேஸ்வரம், திருவையாறு, தஞ்சாவூர், மயிலாடுதுறை. திருமயிலை, திருவொற்றியூர் என எல்லாத் கோவில்களிலும் சிறப்பான முறையில் சங்காபிஷேகம் நடத்தப்படுகின்றது. 108 அல்லது 1008 என சங்குகளில் வெட்டிவேர், விளாமிச்சை, பன்னீர், ரோஜா, ஏலம் என பல்வகைப்பட்ட வாசனாதி திரவியங்களில் நிறைந்த நன்னீரை நிரப்பி ஆகம முறைப்படி பூஜித்து, அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். மாலை நேரத்தில் நிகழும் இந்த சங்காபிஷேகத்தை கண்டு தரிசிப்பதையும், அபிஷேக தீர்த்தத்தை தம் மேல் தெளித்துக் கொள்வதையும் அன்பர்கள் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்வர்.சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறலாம். கார்த்திகை திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.