கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர்   கோவில்

கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில்

ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகார தலம்

தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தலம் கத்தரிநத்தம். இறைவன் திருநாமம் காளகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் மூலவரின் வடிவமைப்பு தஞ்சை பெரிய கோயில் மூலவர் பெருவுடையாரின் வடிவமைப்பை ஒத்திருக்கும்.

ராகு, கேது இங்கே இறைவனை வழிபட்டு நலம் அடைந்ததால் இது ராகு, கேது, தலம் என்றும்,ஜாதகத்தில் ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகார தலமாக விளங்குகிறது. இறைவன் இறைவியின் திருநாமங்களும் ஸ்ரீகாளஹஸ்தி தலத்தைப் போலவே அமைந்திருக்கிறது.

ராகு-கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவை சாற்றி, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம் யாவும் விலகும்.

திருமண தடை நீக்கும் பரிகார பூஜை

திருமண தோஷம் உள்ள ஆண், பெண் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணம் உடனே நடைபெறும். திருமண தடை நீக்கும் பரிகார தலமாக திகழும் இக்கோவிலில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலத்தில் திருமண தடையை நீக்கும் பரிகார பூஜை நடைபெறுகிறது. அப்போது திருமண தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள், அவர்களுக்கு திருமணம் நடந்தேறி விடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால் பல வெளியூர் பக்தர்கள் இப்பூஜையில் வந்து கலந்து கொள்கிறார்கள்.

Read More