ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் (மிட்டாய் முருகன்) கோவில்
முருகனுக்கு மிட்டாய்களை நைவேத்தியமாக செலுத்தும் வினோத நடைமுறை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் வழியில், இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் கோவில். மிகவும் பழமையான இந்த கோவில், பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவில்களில் ஒன்றாக விளங்குகின்றது. கருவறையில், குழந்தை வடிவில் கையில் வேலுடன் திகழ்வதால், முருகப் பெருமானுக்கு குழந்தை வேலப்பர் என்று பெயர். இவருக்கு மிட்டாய் முருகன் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
ஒரு பக்தர் தனக்கு மழலைச் செல்வம் வேண்டி, இத்தலத்து முருகனிடம் பிரார்த்தனை செய்தார், அவருடைய விருப்பம் நிறைவேறியதும், அவர் இங்குள்ள முருகனை வணங்கி, தன்னுடன் வந்த உறவினர்களுக்கு சாக்லேட்களை விநியோகித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் தோன்றி, எனக்கு ஏன் மிட்டாய் கொடுக்கவில்லை என்று கேட்டார். உடனே அந்த பக்தர் கோவிலுக்கு விரைந்து வந்து, முருகனுக்கு மிட்டாய்களை வழங்கினார். அன்றிலிருந்து மிட்டாய் கொடுத்து முருகனை வழிபடும் வினோத நடைமுறை இங்கு வாடிக்கையாகிவிட்டது. கோவிலுக்கு வெளியே மிட்டாய்கள் விற்க கவுண்டர்கள் உள்ளன.
பிரார்த்தனை
இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர்.
திருமணம், பிள்ளைவரம் முதலான வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள், குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை நைவேத்தியமாகச் செலுத்துகின்றனர். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று, குழந்தை வேலப்பருக்கு செந்நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைத்து, மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தால், கல்வித் தடை நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.
பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள், குழந்தை வேலப்பரை தரிசித்து, மிட்டாய் வழங்கிவிட்டே பழநிக்குச் செல்கின்றனர்.