உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோவில்
பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் தரும் தேவாரத் தலம்
திருச்சி மாநகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் பஞ்சவர்ணேசுவரர் கோவில். பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது ஐதீகம். உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது. இத்தலத்து இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேசுவரர். இறைவியின் திருநாமம் காந்தியம்மை.
பிரம்மனுக்கு, தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைவண்ணம் ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் காட்டியதால், இவருக்கு ஐவண்ணப் பெருமான் என்ற திருநாமமும் உண்டு.
இங்கு சிவபெருமான், உதங்க முனிவருக்கு தன்னுடைய ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். காலையில் ரத்ன லிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் சுவர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். ஆடி பௌர்ணமி தினத்தன்று தான் சிவபெருமான், உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களில் காட்சி அளித்தார். இன்றும் ஆடி பௌர்ணமியன்று, இந்த நிகழ்ச்சி இங்கே திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தவராவார். இவருடைய சிலை இச்சிவாலயத்தின் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. யானைப்புக முடியாத 70 மாட கோயில்களை கட்டிய கோச்செங்கட் சோழன் பிறந்த தலமும் இதுவாகும் .
பிரார்த்தனை
படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய, இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேசுவரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும், கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எத்தகைய சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும்.
தான்தோன்றீஸ்வரர் கோவில்
நவக்கிரகங்கள் தம் மனைவியருடனும், வாகனத்துடனும் இருக்கும் ஆபூர்வக் காட்சி
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர் தலத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் வக்கரித்த நிலையில் காட்சி தருவார்கள். மேலும் சில தலங்களில் தம்பதி சமேதராகவோ அல்லது தம் வாகனத்துடனோ காட்சி தருவார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் தம் வாகனத்துடன் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இக்கோவிலில் குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் காப்புத் திருவிழா வெகு பிரசித்தம்.
தான்தோன்றீஸ்வரர் கோவில்
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள்.. காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள். அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
கோயில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.
குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோயிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வெக்காளி அம்மன் கோவில்
வெட்டவெளியில் அமர்ந்து பக்தர்களின் வேதனையை தீர்க்கும் அம்மன்
திருச்சி மாநகரின் மையப் பகுதியான உறையூரில் அருள்பாலிக்கிறாள் வெக்காளி அம்மன். உறையூர் பகுதியின் காவல் தெய்வமான அன்னை வெக்காளி அம்மன், முற்காலத்தில் சோழர்களின் இஷ்ட தெய்வமாகவும் விளங்கினாள். பொதுவாக ஆலயங்களில், மூலவரின் கருவறையின் மேல் விமானம் அமைந்திருக்கும். ஆனால், வெக்காளி அம்மன் வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள். வெக்காளி அம்மன் வெட்ட வெளியில் உள்ள ஒரு பீடத்தில் சாந்த சொரூபியாய் கருணை ததும்பும் முகத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். சிரசில் அக்னிச் சுவாலையுடன் கூடிய கிரீடமும்,, அதில் நாகமும் அமைந்துள்ளது. சிவந்த வாயில் துருத்திக் கொண்டிருக்கும் கோரை பற்களில் சீற்றம் கிடையாது. நான்கு கரங்களில், மேற்கரங்கள் இரண்டில் உடுக்கை, பாசம், கீழே வலது கரம் சூலம் ஏந்தியிருக்கிறாள். வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்த விதமாக காட்சி தருகின்றாள். பொதுவாக, இடதுகாலை மடித்து காட்சிதரும் கோலத்திற்கு மாறாக, வலது காலை மடித்து காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இது 'வீர ஆசனம்' என்று அழைக்கப்படுகிறது.
வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்தற்கான காரணம்
வன்பராந்தகன் என்னும் சோழ மன்னன் ஆட்சிக்காலத்தில், சாரமா முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபக்தரான இவர், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிகள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தாயுமான சுவாமிகளின் பூஜைக்கு என்று நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார்.பிராந்தகன் என்னும் பூ வணிகன் இவரது நந்தவனத்து பூக்களை பறித்து அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை அறிந்த சாரமா முனிவர், மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னனோ முனிவரை அலட்சியம் செய்தான். பின்னர், முனிவர் தான் வணங்கும் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத் தாங்காமல், தாயுமான சுவாமிகள், அதுவரை கிழக்கு நோக்கி எழுந்தருளியிருந்த தன் நிலையை மாற்றி. மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.சிவபெருமானின் கோபத்தினால் அப்போது உறையூரில் மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரனங்களும் தப்பியோடிப் பிழைக்க வழி தேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள தங்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனை தஞ்சமடைந்தனர்.வெக்காளியம்மன் தாயுமானவ சுவாமிகளை வேண்டினாள். அதற்குப் பிறகு, மண் மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது. மக்களின் துயர் கண்டு வெக்காளியம்மன், ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன் என்று அருள் வாக்கு கூறினாள்.அதனால்தான், அன்னை வெக்காளி, இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை, வெய்யில் இவைகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வருகிறாள்.பொதுவாக ஒரு கோவில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு பரிகாரத் தலமாக விளங்கும். ஆனால் உறையூர் வெக்காளியம்மன் பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவளாகவும் அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவும் விளங்குகின்றாள். அம்மன் சன்னிதியின் எதிரே சூலங்கள் நடப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி அதனை அம்மனின் பாதங்களில் வைத்து எடுத்து, பின்னர் அதனை அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.
அழகிய மணவாளர் கோவில்
தாயார் மட்டும் பரமபதவாசல் கடக்கும் திவ்ய தேசம்
பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், திருச்சியில் இருக்கும் திவ்ய தேசமான உறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயிலில், தாயார் கமலவல்லி மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது இல்லை.
இக்கோவில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விழாக்களையொட்டி நடக்கிறது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, மாசியில் வரும் ஏகாதசியன்று தாயார் கமலவல்லி சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.