இராமநாதர் கோவில்
காவி உடை அணியும் விநாயகர்கள்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில், தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்க தலம் ராமேஸ்வரம். பாண்டிய நாட்டு தேவாரத் தலங்கள் பதிநான்கில் இத்தலமும் ஒன்று. இத்தலததில் இறைவன் ராமநாதசுவாமியுடன், அம்பிகை, பர்வதவர்த்தினி எனும் மலைவளர் காதலி அருள்பாலிக்கிறாள். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
பர்வதவர்த்தினி அம்பாள் சந்நதி பிராகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த விநாயகர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகப்பெருமான், பிரம்மச்சாரி என்பதால் இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துறவிகள் போல, பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.
இராமநாதர் கோவில்
பாதாள பைரவர்
இராமர், இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர்இராமேஸ்வரத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு 'பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
இராமநாதர் கோவில்
அபிஷேகம் செய்தாலும் கரையாத உப்பு லிங்கம்
இராமபிரான் ராவணனை வதம் செய்த தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். லிங்கப் பிரதிஷ்டை செய்வதற்காக அனுமனை காசித் தலத்திற்கு அனுப்பி சிவலிங்கத் திருமேனியை எடுத்து வரச் செய்ய, அனுமன் வருவதற்கு தாமதமாகவே சீதாதேவி மணலால் பிடித்து வைத்த லிங்கத்திற்கு இராமபிரான் பூஜைகள் செய்தார். அந்த மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிதான் தற்போது இராமநாதர் என்ற திருநாமத்துடன் கருவறையில் அருள் பாலிக்கிறார் என்பது ஐதிகம்.
இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.
இந்த லிங்கம் உருவானதற்கு ஒரு சுவையான பின்னணி உள்ளது. ஒரு முறை சிலர்,இராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் சாதாரண மனிதனான தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.