ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாளுக்கு புடவை மட்டுமே வஸ்திரமாக சாற்றப்படும் தலம்
சிங்கப் பெருமாள் கோவிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்திருக்கும் ஔஷதகிரி (மூலிகை மலை) என்ற மலை மீது நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மலைமீது உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல 480 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவிலில் வெங்கடேச பெருமாள் மட்டுமே பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. இத்தலத்தில், பெருமாளும் தாயாரும் இனைந்து ஒரே வடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை. அதனால் தான் பெருமாளுக்கு 'நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. பெருமாளும் தாயாரும் இங்கு ஐக்கியமாகி இருப்பதால், அதாவது பெருமாள் லட்சுமி சொருபமாக இருப்பதனால் புடவைதான் வஸ்திரமாக சாற்றப்படுகிறது. அதைத் தவிர வேறு வஸ்திரங்கள் பெருமாளுக்குசாற்றபடுவதில்லை.
தல வரலாறு
ராம, ராவண யுத்தத்தின்போது இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர், அந்த அஸ்திர தாக்குதலில் அகப்படாமல் தப்பித்த ஒரு சிலரில் முக்கியமானவர் ஆஞ்சனேயர். அவர் ஜாம்பவானின் அறிவுரைப்படி இலங்கையில் இருந்து கடலை தாண்டி இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து, மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க தேவையான நான்கு வகை மூலிகைகளை எடுக்க செல்கிறார் . இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரனத்தால், அனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறான். அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மாற்றும் போது, அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதிதான் இங்கு மூலிகை மலையாக இருக்கின்றது. அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூர்(ஆப்பூரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது) பகுதியில் விழுந்ததாம்.
பிரார்த்தனை
பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர். திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் குறைகள் போய் விடும்.