காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்

கிணற்று நீர் பிரசாதமாக தரப்படும் விநாயகர் தலம்

சித்தூர் நகரத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 68 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். நாட்டில் மிகப்பெரிய விநாயகர் மூர்த்தி அமைந்துள்ள ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கும் வர சித்தி விநாயகர், ஒரு கிணற்றிலிருந்து சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர்.

முன்னொரு காலத்தில், இப்பகுதியில் ஊனமுற்ற மூன்று சகோதரர்கள் இருந்தனர். ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்கு கண் தெரியாது. அவர்களிடம் 'காணி' நிலமே இருந்தது. அவர்கள் அதில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இருப்பினும் ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அந்த சகோதரர்கள் ஒரு கிணற்றில் உள்ள நீரை நம்பி விவசாயம் செய்து வந்தனர். ஒருமுறை கிணறு வற்றிப் போகவே, அதை ஆழப்படுத்த நினைத்து தோண்ட ஆரம்பித்தனர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீரிட்டது. அங்கு விநாயகர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த விநாயகரை வெளியில் எடுக்க, அந்த ஊர் மக்கள் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதனால் ரத்தத்தை நிறுத்த மக்கள் இளநீரால் கிணற்றிலேயே அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் உள்ள காணியில் பாய்ந்தது. எனவே இந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல, அந்த கிணற்றுக்குள்ளேயே விநாயகரை சுற்றி சன்னதி எழுப்பினர். தொடர்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு அங்கு கோவில் உருவானது.

கிணற்று நீர் பிரசாதம்

இத்தலத்து விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் இங்குள்ளது. இந்த விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கிணற்று நீரை நாம் அருந்தினால் நாம் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். இதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

தலைமை நீதிபதியாக கருதப்படும் விநாயகர்

இங்கு தினமும் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்த வகையான குற்றச் செயல்களாக இருந்தாலும், இங்கு நடக்கும் சத்திய பிரமாணத்தில் கலந்து கொண்டு சத்தியம் செய்தால், அவர் நிரபராதியாக இருந்தால் அவருக்கு எதுவும் ஆவதில்லை. ஆனால்,பொய் சத்தியம் செய்பவர்களுக்கு இந்த வரசக்தி விநாயகர் கடுமையான தண்டனை வழங்குவார் என்பது நம்பிக்கை. அதனால் இந்த காணிப்பாகம் பகுதியை சேர்ந்த பக்தர்களுக்கு விநாயகரை தலைமை நீதிபதியாக பார்க்கின்றனர்.

நாளுக்கு நாள் வளரும் விநாயகர்

காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார். கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த ஒருவர், ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் அந்த வெள்ளிக்கவசம் விநாயகருக்கு பொருந்த வில்லையாம்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தில் வழிபட்டால் உடல் ஊனமுற்றவர்கள் குறைகள் தீரும். கணவன் - மனைவி பிரச்சினைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஏராளமான பக்தர்கள் இங்கு வருவதால், இக்கோவிலில் பூஜை செய்வதற்கு முன்பதிவு செய்வது அவசியம். அவ்வளவு பக்தர்கள் கூட்டம் இருக்கும்.

Read More