அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்

இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிக்கும் அபூர்வ மூல கருடன்

காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான கோவில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை தாயார்.. இங்கு வழிபடுதல், திருமலையில் வழிபடுவதற்கு சமம் என்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் இராமாநுஜர் ஆராதித்த பெருமாள் விக்கிரம், திருப்பதியிலிருந்து கொண்டு வந்த ஸ்ரீசடாரி, திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஆலபத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அக்னி ஆகிய மூன்றும் இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ளன.

அனைத்து வைணவ ஆலயங்களிலும் வெளிப் பிரகார மதில் சுவர்களின் மூலையில் சிறகுகளை விரித்த நிலையில் அமர்ந்த கோலக் கருடனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோவிலைக் கருட பகவான் காவல் காப்பதாக ஐதீகம். இத்தலத்தின் ஈசானிய மூலையில் எழுந்தருளியுள்ள கருடன் விசேஷமாக ஆராதிக்கப்படுகின்றார். திருமதில் சுவரில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால் இவர் 'மூலைக் கருடன், மூல கருடன், மதில் கருடன்' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். இவர் கோபுரத்துடன் கூடிய தனி சந்நிதியில், இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி மாத மஹா சுவாதி அதி விசேஷம்.

மூல கருடனுக்கு சுவர் மீது சிதறு தேங்காய்களை உடைக்கும் வித்தியாசமான நடைமுறை

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை தரையில் உடைப்பதில்லை. வானில் வீசி உடைப்பது போலச் சுவர் மீது உயர வீசி உடைக்கின்றார். இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல் பில்லி சூனியம், மன வியாதி அகலும். சத்ருபயம் நீங்கி வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். பெரும்பாலான எல்லாக்‌ காணிக்கைகளும்‌ இந்த மூலக்‌ கருடனுக்கே செலுத்தப்படுகிறது.

Read More