கூத்தனூர் சரஸ்வதி கோவில்

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் வழங்கும் சரஸ்வதி தேவி

சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். பிரம்மனின் துணைவியான சரஸ்வதி கல்வி கடவுளாகவும், ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாகவும் திகழ்கிறாள். இவருக்கு கலைமகள், காயத்ரி, சாரதா என்ற பெயர்களும் உண்டு. சரஸ்வதி கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. இவரது சகோதரர் சிவபெருமான்தான் இந்த வீணையை உருவாக்கி, இவருக்கு வழங்கினார்.

தமிழ் நாட்டில் சரஸ்வதிக்கு என்றே தனியாக கோவில் உள்ள திருத்தலம் கூத்தனூர். கூத்தனூரில், நாம் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம்.

இத்தலத்தை, இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அவைபுலவராக விளங்கிய, சரஸ்வதியின் அருள்பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார். ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தன் + ஊர் = கூத்தனூர் என்றாயிற்று .ஓட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.ஓட்டகூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு பரணி பாடினால் விட்டுவிடுவதாக கூற ,கூத்தரின் நாவில் சரஸ்வதி அமர்ந்து பரணி பாடிட அருளினார். புலவர் கம்பரின் சங்கடங்களை தீர்ப்பதற்காக, இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாகவும் , இடையர் குல பெண்ணாகவும் நேரில் வந்து அருள் புரிந்தார். பிறவி ஊமையான புருஷோத்தமன் என்னும் பக்தனுக்கு தன்னுடைய வாய் தாம்பூலத்தை தந்து, உலகம் போற்றும் புருஷோத்தமா தீட்சிதர் ஆக்கினார்.

சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே மலரிட்டு பூஜிக்கும் வகையில் அம்மனின் பாதங்களை அர்த்த மண்டபம் வரை அமையுமாறு, நீட்டி அலங்கரிப்பது கண்கொள்ளா காட்சி

இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 
Previous
Previous

மேகநாதர் கோயில்

Next
Next

தேனுபுரீஸ்வரர் கோவில்