திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில்
கடுகு, சா்க்கரை மற்றும் மூலிகைகளாலான திவ்ய தேசப் பெருமாள்
நாகர்கோவிலில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பதிசாரம் என்னும் திவ்ய தேசம். இத்தலத்து மூலவரான திருவாழ்மாா்பன் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இம்மூலவர். கடுகு, சா்க்கரை மற்றும் மலை தேசத்து மூலிகைகளால் ஆனவா் என்பதால், இவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. இலட்சுமித் தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். அதனால் இத்தலத்தில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. பெருமாள் இலட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார்.