ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் கோவில்

இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய பெருமாள்

பெருமாள் விழாக்களின்போதுதான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார்.ஆனால் மூலவர் புருஷோத்தம பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார்.இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.

இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு. புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

படங்கள் உதவி : திரு. L. அண்ணாமலை, கோயம்புத்தூர்

 
Previous
Previous

நாடியம்மன் கோவில்

Next
Next

அக்னீஸ்வரர் கோவில்