ஆவூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்

கருவறை விமானத்து கலசம் கருங்கல்லால் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு

கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் ஆவூர். இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் பழமை மிக்கது. தேவலோகப் பசுவான காமதேனு தனது பெண் நந்தினியுடன் இத்திருத்தலத்தில் தங்கி இங்கு எழுந்தருளி அற்புத சேவை சாதிக்கும் ஸ்ரீ லஷ்மிநாராயணப் பெருமாளைக் குறித்து நீண்ட காலம் தவம் இயற்றியதால், இத்தலத்திற்கு 'ஆ'வூர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது எனத் தல வரலாறு கூறுகிறது. 'ஆ'என்றால் 'பசு' என்று பொருள். கருவறையில் லட்சுமி நாராயணப் பெருமாள் தனது இடது கரத்தால் தாயாரை அரவணைத்து, வலது கரத்தால் பக்தர்களுக்கு அபயம் அருள் பாலிக்கிறார். பொதுவாக கோவில் கருவறை விமானத்தின் கலசங்கள் தாமிரம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவில் கருவறை விமான கலசம் கருங்கல்லால் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய அமைப்பை நாம் காண்பது அரிது.

வரப்பிரசாதியான ஜெயவீர ஆஞ்சநேயர்

மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமாகப் பூஜிக்கப்படும் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர், புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின மன்னராக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்த அவதார புருஷர் ஆவார். பீஜப்பூர், கோல்கொண்டா, அஹமது நகர் ஆகிய மூன்று கல்தான்களுக்கும். விஜயநகர சாம்ராஜ்யத்திற்கும் நடந்த மிகப் பெரிய போரில், சூழ்ச்சிகளால் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. பின்னர் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர் பாரத தேசம் முழுவதும் பயணித்து 700க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் விக்ரகங்களை பிரதிட்டை செய்தார். அவர் பிரதிட்டை செய்தது தான் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர். சுமார் நான்கரை அடி உயரம் கொண்ட இந்த ஜெயவீர ஆஞ்சநேயர் வாலில் மணி கட்டிய கோலத்தில், தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். வலது கரம் பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாகவும், இடது கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்திக் காட்சியளிக்கிறார். பகைவர்களால் ஸ்ரீ அனுமனின் சிலா திருமேனிக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த மணியில் அதர்வண வேத மந்திரம் பிரயோகத்தையும் செய்தருளியுள்ளார் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர்.

பொதுவாக வாலில் மணி கட்டிய அனுமனை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். தெற்கு நோக்கியபடி வீற்றிருக்கும் இந்த அனுமனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. விரும்பிய வரங்களை தரும் சிறந்த வரப்பிரசாதியாக இவர் திகழ்கின்றார்.

தகவல், படங்கள் உதவி : திரு. சேதுமாதவராவ், சென்னை

 
Previous
Previous

திருமண்டங்குடி திருபுவனேசுவரர் கோவில்

Next
Next

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்