திருவெண்காடர் கோவில்
திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடு சிவத்தலம் இருக்கிறது.இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர், திருவெண்காடர், திருவெண்காட்டுத் தேவர், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான், அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.
பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்த அம்பிகை
பிரம்ம வித்யாம்பிகைக்கு, பெரியநாயகி, மாதங்கி, வேயனதோளி நாச்சியார் என பல திருநாமங்கள் உள்ளன. திருவெண்காடு திருத்தலத்துக்கு அருகில் திருநாங்கூர் எனும் வைணவ திருத்தலம் உள்ளது. அங்கே, மதங்காஸ்ரமத்தில், மதங்க முனிவருக்கு மாதங்கி எனும் பெயரில் மகளாக வளர்ந்து, திருவெண்காடரை நோக்கி கடும் தவம் புரிந்து, ஈசனை கணவராகப் பெற்றாள் என்று பத்மபுராணம் கூறுகிறது. பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்ததால் அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை எனும் திருநாமம் அமைந்தது. 51 சக்தி பீடங்களில் இத்தலம் பிரணவபீடம் என போற்றப்படுகிறது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் தனி உள்பிரகாரத்துடன், அம்பிகை சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகையின் நான்கு திருக்கரங்களில், இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். வலது கீழ்க்கரம் அபய கரம், இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.
திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த அம்பிகை
திருஞானசம்பந்தர், திரு வெண்காட்டின் வட எல்லைக்கு வந்த பொழுது அவருக்கு ஊரெல்லாம் சிவ லோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் காட்சியளிக்க, இத்தலத்தினை மிதிப்பதற்கு அஞ்சி அவர் 'அம்மா' என்றழைக்க, பிரம்மவித்யாம்பாள் அங்கு தோன்றி, தனது இடுப்பில் திருஞானசம்பந்தரை இடுக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த வடிவில் அம்பாள் சிலை கோயிலின் மேற்கு உட்பிராகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட குளக்கரை குளம் 'கூப்பிட்டான் குளம்' என்று அழைக்கப்பட்டு, இன்று 'கோட்டான் குளம்' என்று மறுவிவிட்டது.
ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள்
தேவி கல்வி வரம் தருவதில் நிகரற்றவள். அருளும் பொருளும் அள்ளித்தரக்கூடியவள். அம்பிகை வரப்பிரசாதியாய் திகழ்ந்தருளும் திருத்தலம் இது. ஒருவரின் ஜாதகத்தில், புதன் நீச்சம் பெற்று இருந்தால் இங்கு வந்து வழிபட்டு, அம்பிகையை மனமுருகி வேண்டினால், அனைத்து குறைகளையும் நீக்குவாள் அம்பிகை. மனிதன் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஞானம், அறிவு, கலைகளில் மேன்மை இருந்தால்தான் வாழும் வாழ்க்கை இனிமையும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். அத்தகைய ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள் அன்னை பிரம்ம லிதயாம்பிகை
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி மூன்றாம் நாளன்று வெளியான பதிவு
நாகை நீலாயதாக்ஷி அம்மன்
https://www.alayathuligal.com/blog/3d8ght8lka6dy92dbtp8rramxpfljr