சுப்ரமணிய சுவாமி கோவில்
இரண்டு அடுக்கு கொண்ட முருகன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இரண்டு அடுக்காக அமைந்து இருக்கிறது.இந்தக் கோயிலைப் புதுப்பிக்கும்போது பழைய சிலையை எடுக்க முடியவில்லை.அதனால் பழைய முருகன் சிலை இருந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலை நிர்மாணித்து அதில் புதிதாக ஒரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோவில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது. இத்தலத்தில் முருகன் பாலகனாக தனித்து இருந்து அருள்புரிகிறார்.உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி” (கேணி – கிணறு) என்று பெயர் பெற்றது.