வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்தில் தெரியும் வேங்கை வடிவம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருவேங்கைவாசல். திருவேங்கைபதி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக வியாக்ரபுரீசுவரர் உள்ளார். வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். மூலவர் திருவேங்கைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்பிகையின் பெயர் அருள்மிகு பிரகதாம்பாள். தமிழில் பெரியநாயகி.
மூலவர் வேங்கைவன நாதர் சிறிய சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அர்ச்சகர் காட்டும் தீபராதனை ஒளியில் கூர்ந்து பார்த்தால் அதில் இறைவனின் வேங்கை வடிவத்தைக் கண்டு பிரமிப்படையலாம். சிவலிங்கத்தின் மேல் பகுதியில் வட்டமான இரண்டு வேங்கைக் கண்களையும், ஆக்ரோஷமாய்த் திறந்துள்ள வேங்கையின் வாய்ப்பகுதியையும் கண்டு ஆனந்தித்து அருள் பெறலாம்.
தல வரலாறு
ஒரு சமயம் தெய்வப் பசுவான காமதேனு, தேவேந்திரனின் சாபத்தினால், பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்தது. அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு பேணிப் பாதுகாத்து வந்தார்.
ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும் வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது. மாமுனி வசிட்டர் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்றில் கபிலர் என்னும் முனிவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன் சாபம் நீங்கும்,
அவ்வாறே பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம் சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில் வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம் அகலும் என்று வழி காட்டினார்.
அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக் கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு. இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று பாலூட்டிக் கொண்டிருந்தது. வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள் அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது. உடனே அதைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை. வேங்கையிடம் மன்றாடியது பசு. என்னை விட்டு விடு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன். என்னை இப்போது விட்டுவிடு. அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத் தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டது.
சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு. தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர். அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார். வழிமறித்தார். பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை. சொன்ன சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு. பசுவின் வாக்கு தவறாத பண்பால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக் காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.
வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு
https://www.alayathuligal.com/blog/9mhr7kt2lf8z7mfs6y9gk4fb7ffnjc
தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்
https://www.alayathuligal.com/blog/s2ymrhrk486l63psxj8et4h3g9f699