கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்

முருகன் பிறக்கக் காரணமான தலம்

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில், 8 கி.மீ தொலைவில் உள்ள கஞ்சாநகரம் என்ற ஊரில் அமைந்துள்ளது காத்ர சுந்தரேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் காத்ர சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் துங்கபாலஸ்தானம்பிகை. சிவனின் நெற்றிக்கண்ணில்,ஆறு குழந்தைகளாகத் தோன்றிய முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகை பெண்கள். நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பேரும் அவதரித்த தலம் இது.

பத்மாசுரன், சிங்கமுகன் முதலிய அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறை போக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன். காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். காத்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை, கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலமாக இது விளங்குகின்றது. இக்கோவிலில் அவர்கள் தீபம் ஏற்றி விசேஷ வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மண வாழ்க்கை அமையும். திருமணத்தில் தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால், இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது ஐதீகம்.

 
Previous
Previous

ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

Next
Next

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில்