திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணன் கோவில்
நரசிம்ம அவதாரம் எடுக்கு முன்னரே அக்கோலத்தை பெருமாள் காட்டி அருளிய திவ்ய தேசம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்கோஷ்டியூர். கருவறையில், சௌமிய நாராயண பெருமாள், பிரம்மாண்டமான வடிவில் ஐந்து தலை நாகத்தின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவிருடன் மற்றும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா மற்றும் அவரது மூன்று மனைவியர்கள் சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி ஆகியோருடன் காட்சி அளிக்கிறார். இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்குப் பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். தாயார் திருநாமம் திருமாமகள்.
ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோவிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஒரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது. விமானத்தின் கீழ்த் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சௌமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபத நாதர் (வைகுண்ட பெருமாள்) என பெருமாள் நான்கு நிலைகளில் அருளுகிறார். பொதுவாக கோவில்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.
தல வரலாறு
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார். மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியருளும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.
திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம்
இத்தலத்தில் வாழ்ந்த திருக்கோட்டியூர் நம்பியிடம், வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர் எட்டெழுத்து மந்திரத்தை 'எவருக்கும் வெளியிடக்கூடாது' என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மக்கள் அனைவரும் கேட்கும்படி, மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். ராமானுஜர் உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இதற்குண்டு.
பிரார்த்தனை
இந்தக் கோவிலில் விளக்கு நேர்த்திக் கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி பெருமாளிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.