நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்
தனக்கான கோவிலைத் தேர்ந்தெடுத்த மாரியம்மன்
நாகப்பட்டினத்தில் வணிகர் ஒருவர் நெல்லுக் கடை நடத்தி வந்தார். ஒருநாள் இரவு கனத்த மழை பெய்யத் தொடங்கவே, வணிகர் கடையைச் சாத்திவிட்டு வீடு திரும்பத் தயாரானார். அப்போது அங்கே வந்த ஒரு பெண்மணி இரவு அவர் கடையில் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார். அந்தப் பெண்ணை தனியே தன் கடையில் தங்க வைக்க வணிகர் தயங்கினார். அதனால், அந்த பெண்மணியை கடைக்குள் வைத்து, கடையைப் பூட்டிக் கொண்டு வீடு திரும்பினார்.
மறுநாள் கடையை திறந்து பார்த்தபோது, அந்தப் பெண்மணியை காணவில்லை. மாறாக அந்தப் பெண்மணியே, கடைக்குள் அம்மனாக அமர்ந்திருந்தார். நெல்லுக்கடையே அம்மனின் கோவிலாக மாறியது. அதனால், இந்த கோவிலை, நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் என்றழைத்தார்கள்.
இக்கோவிலில் நடைபெறும் செடில் திருவிழா மிகவும் பிரபலமானது. அப்போது, பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.