மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
வெள்ளைக் கல்யானை மீண்டும் கரும்பு தின்ற அதிசயம்!
மதுரையில் சோமசுந்தரக்கடவுள் செய்த அறுபத்திநான்கு திருவிளையாடல்களில் ஒன்று, சொக்கநாதர் கோவில் கல் யானை கரும்பு தின்ற நிகழ்ச்சியாகும். சோமசுந்தரேசுவரர் சன்னதியின் திருச்சுற்றில் இருக்கும் வெள்ளை யானைகளில் ஒன்று தான் கரும்பு தின்றதாகப் புராணம்.
புராணக் காலத்தில் நடந்த அதிசயம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நிகழ்ந்ததாக வரலாறு உண்டு. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் மதுரை வரை படையெடுத்து வந்து எல்லாத் திருக்கோவில்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு வந்த போது நிகழ்ந்தது இது. மதுரையை முற்றுகையிட்டு மதுரையை வென்று மாலிக் காபூர் ஆண்டு வரும் போது அவரது படைத்தளபதி ஒருவர் திருக்கோவிலைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருச்சுற்றில் இருக்கும் எட்டு வெள்ளை யானைகளைக் கண்டு வியந்து அருகில் இருந்தவர்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டார்.
அங்கிருந்தவர்கள் பலருக்கு அந்த யானைகள் அங்கே காலம் காலமாக இருப்பது தெரியுமே ஒழிய அவற்றைப் பற்றிய மற்ற செய்திகள் தெரியவில்லை. அதனால் அங்கே அமர்ந்திருந்த துறவி ஒருவரிடம் அந்த தளபதியை அழைத்துச் சென்றனர். அந்தத் துறவியும் கல் யானை கரும்பு தின்ற கதையைச் சொன்னார். அந்தக் கதையைக் கேட்ட தளபதி உடனே நேராக மாலிக் காபூரிடம் சென்று அந்தக் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு மாலிக்காபூர் ' கல்யானையாவது, கரும்பைத் தின்பதாவது. நல்ல கதை' என்று ஏளனமாகச் சிரித்தான் . அந்தக் கதையைச் சொன்ன துறவியைக் காட்டு. இப்போதும் கல்யானை கரும்பைத் தின்னுமா என்று கேட்போம்' என்று சொல்லி கோவிலுக்கு வந்தார்கள்.
துறவியிடம் வந்து 'எந்தக் கல்யானை கரும்பு தின்றது?' என்று கேட்டான் மாலிக்காபூர். அவர் ஒரு யானையைக் காட்ட, 'இப்போது இந்த யானை கரும்பைத் தின்னுமா?' என்று கேட்க, துறவி 'தின்னும்' என்று சொன்னார். ஏளனமாகப் பார்த்துக் கொண்டே மாலிக்காபூர் ஒரு கரும்பை நீட்ட அந்த கல்யானை கரும்பை வாங்கித் தின்றது. ஆச்சரியப் பட்ட மாலிக்காபூர் திரும்பி அந்தத் துறவியைப் பார்க்க அங்கே யாரும் இல்லை. அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோரும் அது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்று போற்றினார்கள்.
கல்யானை கரும்பு தின்ற அதிசயம் பற்றிய முந்தைய பதிவு
தைப்பொங்கலன்று சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்
கல் யானை கரும்பு தின்ற அதிசயம்!
https://www.alayathuligal.com/blog/nkds9329ftkeafzagx69n2nnlldb3e