யனமதுரு சக்தீசுவரர் கோவில்
தலைகீழாக காட்சி தரும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது பீமாவரம் என்ற ஊர். இந்த ஊரின் அருகில் 5 கி.மீ. தொலைவில் யனமதுரு கிராமத்தில் அமைந்துள்ளது சக்தீசுவரர் கோவில். இறைவனின் திருநாமம் சக்தீசுவரர்.இறைவியின் திருநாமம் பார்வதி.
இந்த ஆலயத்தில் சதுர வடிவ ஆவுடையாரின் மீது சிவலிங்கத் தோற்றத்தில் இறைவன் அருள் பாலிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த சிவலிங்க தோற்ற கல்லின் மீது, ஜடா முடியுடன் கூடிய சிவபெருமானின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் தலை கீழாக. தியான கோலத் தில் இருப்பது போல கண்களை மூடியிருக்கும் ஈசனின் தலைப் பகுதி கீழேயும், கால் பகுதி மேலேயும் அமைந்திருக்கிறது. இந்த இறைவனின் அருகில் பார்வதி அமர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய மடியில் முருகனை கிடத்தி வைத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார்.
சிரசாசன கோல தலவரலாறு
முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் எமனை தவிர அனை வரையும் தோற்கடித்தான். எமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க எமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் எமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் எமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது எமன் நின்றார். எமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார். எமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். எமனும் சம்பாசுரனை கொன்று தேவர்களின் குறையை தீர்த்தார். பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.
யம பயம் போக்கும் சிவ பெருமான்
எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த இறைவனையும், அம்பாளையும் வழிபட் டால் குடும்ப ஒற்றுமை ஓங்கும், கணவன்-மனைவி பிரச்சினை மறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.