நாகர்கோவில் நாகராஜ கோவில்
பாம்பையே மூலவராக கொண்ட அபூர்வ கோவில்
நிறம் மாறும் கருவறை மண் பிரசாதம்
பாம்பையே மூலவராக கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜ கோவில் தான். இந்த ஊருக்கு நாகர்கோவில் என்று பெயர் வர காரணமாக அமைந்தது இந்த கோவில் தான். இங்கே கருவறையில் நாகமே மூலவராக உள்ளது. இக்கோவிலில் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
முற்காலத்தில் இந்தப் பகுதி வயல்கள் சூழ்ந்த பகுதியாக இருந்தது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருந்த ஒரு பெண், ஒரு நெற்கதிரை அறுக்கும்போது அதிலிருந்து ரத்தம் வந்தது. இதைக் கண்டு பதறிய அப்பெண் இதுகுறித்து அருகிலிருந்தவர்களிடம் கூற அவர்கள் ரத்தம் வந்த இடத்தை பார்த்தபோது அங்கு ஒரு பாறையின் மேல் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. அந்த நாகர் சிலையின் மேற்பகுதியிலிருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த நாகர் சிலைக்குப் பொதுமக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டதும் ரத்தம் வருவது நின்றுவிட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் நாகர் சிலைக்கு ஓலையால் வேய்ந்த குடிசை அமைத்து, நாகர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். இன்றும் கருவறை மட்டும், அமைக்கப்படுகின்றது. நாகங்கள் வசிப்பதற்கேற்ப ஓலைக் கூரையாலேயே அமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் இந்த கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களே ஓலைக்கூரையைப் பிரித்து மீண்டும் புதிய கூரை வேய்கின்றனர்.இந்த கோயிலை நாகங்களே பாதுகாக்கின்றன.
ஆமை உருவம் இருக்கும் வித்தியாசமான கொடிமரம்
இக்கோவிலின் மூலவர் நாகராஜா என்றாலும் அனந்தகிருஷ்ணன் சன்னதி எதிரில் தான் கொடிமரம் உள்ளது. பொதுவாக பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.
வழிபாட்டின் சிறப்பு
நாகராஜா கோவிலில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆயில்ய நட்சத்திர தினத்தன்று முறைப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் தீரும் என்பது நம்பிக்கை. பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு, மேலும் சிறப்பு பெற்றது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கிறார்கள். ஆவணி ஞாயிறு விரதமிருந்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், சருமவியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஜாதகத்தில் இருக்கும் நாகதோஷம் இங்கு வழிபடுவதன் மூலமாக தோஷம் நீங்குகிறது என்பது ஐதீகம்.