சுப்ரமணிய சுவாமி கோவில்
புத்தாண்டில் படிபூஜை நடக்கும் முருகன் தலம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிவில் வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கின்றது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.
கஜேந்திரவரதன் கோவில்
இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்த திவ்ய தேசம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் கபிஸ்தலம். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்தது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.
பாலீஸ்வரர் கோவில்
களவு போன பொருட்களை மீட்டுக் கொடுக்கும் கதவிற் கணபதி
பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமைந்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள பாலீஸ்வரர் ஆலயத்தில் கதவிற் கணபதி அருள்பாலிக்கின்றார். சுமார் ஒரு சாண் அளவே உள்ள மரத்தால் ஆன திருமேனி உடையவர். ஆனால் இவரின் கீர்த்தியோ பெரிது. மஹா மண்டபத்தில் தனி சன்னதியில் இருக்கும் இவரை வணங்கிட வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.பல ஆண்டுகளுக்கு முன், கோயிலின் திருக்கதவில் தீப்பற்றிக் கொண்டு எரிந்ததாம். கதவு முழுதும் எரிந்தும், அதில் சிற்ப வடிவமாக இருந்த இந்தக் கணபதிக்கு மட்டும் ஒன்றும் நேரவில்லை. எனவே, இவருக்கு இந்தப் பெயர் நிலைத்துவிட்டது.பொருள் களவு கொடுத்த அன்பர்கள், எதையாவது தொலைத்து விட்டு அது திரும்பக் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், இந்தப் பிள்ளையாரை வழிபட்டு வேண்டிக் கொண்டால், அந்தப் பொருள்கள் விரைவில் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அவ்வாறு கிடைத்து விட்டால், இந்தப் பிள்ளையாருக்கு ஏழு தேங்காய்களை உடைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
பழமலைநாதர் கோவில்
சிவபெருமான் சந்தோஷத்திற்காக நடனமாடிய தேவாரத் தலம்
விருதாச்சலம் கடலூரில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேவாரத் தலம்.சுவாமியின் திருநாமம் விருத்தகிரீசுவரர்.அம்மன் திருநாமம் விருத்தாம்பிகை.இத்தலத்தின் புராண பெயர் திருமுதுகுன்றம் ஆகும்.ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
இராமனாதீஸ்வரர் கோயில்
அம்பாள் கையில் குழந்தையாக காட்சி தரும் நந்தி தேவர்
நன்னிலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் இராமநந்தீஸ்வரம்.இத்தலத்து இறைவன் திருநாமம் இராமனாதீஸ்வரர்.இராமபிரான் இத்தலத்திற்கு வந்தபோது, சிவபெருமான் சுயம்புவாக தோன்றினார். இராமபிரானை சாதாரண மனிதர் என்று நந்தி தேவர் அவரைத் தடுத்தார். அம்பாள் தோன்றி உண்மையை உணர்த்த, நந்தி இராமபிரானை வணங்கி, இருவரும் வழிபாடு செய்தனர். அதனால் இத்தலம் 'இராமநந்தீஸ்வரம்' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் 'இராமனதீஸ்வரம்' என்று மருவியது.நந்தியை அம்பாள் அணைத்ததால் சோமாஸ்கந்த மூர்த்தத்தில், அம்பாள் கையில் நந்தி குழந்தையாக காட்சி தருகிறார்.
எழுத்தறிநாதர் கோவில்
கல்வியில் முதன்மை பெறச் செய்யும் தேவாரத்தலம்
கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தேவாரத்தலம், இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறிநாதர். சரிவரப் பேச முடியாதவர்கள், பாடுவதற்கு நல்ல குரல் வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறிநாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறிநாதரின் அருளால் நலம் அடைந்து, நல்ல குரல் வளம் பேச்சு வளம் பெற்றுச் செல்கின்றனர்.தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்திய முனிவர். அவருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கள்ளழகர் கோயில்
பஞ்ச ஆயுதங்களோடு பெருமாள் காட்சி தரும் திவ்ய தேசம்
மதுரைக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருமாலிருஞ்சோலை. மூலவர் பரமசுவாமி. கருவறையில் இவர் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதம் தாங்கிய நிலையில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்
சுப்ரமணிய சுவாமி கோவில்
குழந்தை முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்
திருத்தணி மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பாலீஸ்வரர் கோவில்
பால்வண்ண மேனியனாக காட்சிதரும் பாலீஸ்வரர்
சென்னை பழவேற்காடு அருகேயுள்ள திருப்பாலைவனம் என்னும் தல த்தில், வெள்ளை நிறத்துடன் பால்வண்ண மேனியனாக, பாலீஸ்வரர் அருள்பாலிக்கிறார், பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும் பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று.ஒரு சமயம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது, அந்த அமுதத்தையே சிவலிங்கமாக பிடித்து வழிபட்டனர். அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில்கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது. காலப்போக்கில், சுற்றிலும் அரண்போல பாலை மரம் வளர்ந்துவிட, வெள்ளை லிங்கம் விருட்சத்துக் குள் மறைந்துபோனது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் படை பரிவாரங்களுடன் இந்தப் பகுதியின் வழியே வந்த போது, ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது, அவர் படையிலிருந்த யானை மற்றும் குதிரைகளைப் படை வீரர்கள் லிங்கம் மறைந்திருந்த பாலை மரத்தில் கட்டிப் போட்டனர். சற்றுநேரத்தில் அவை மயக்கமடைந்து அங்கேயே சரிந்தன. இதனைக் கேள்விப்பட்ட ராஜேந்திர சோழன்,. உடனே மரத்தை வெட்ட ஆணையிட்டார். மரத்தைப் படை வீரர்கள் வெட்டியபோது, அதன் நடுவே வெள்ளை நிற லிங்கத் திருமேனி இருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். மன்னர்.பாலீஸ்வரருக்கு, அங்கே பிரமாண்டமாய் ஒரு ஆலயத்தை எழுப்பினார். திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக அருளும் இறைவனே, இங்கே அமுதேஸ்வரராக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகியவை அதிகளவில் நடைபெறுகின்றன. அமுதேஸ்வரரை வேண்டிக் கொள்ள தம்பதியர் பூரண ஆரோக்கியத்துடன் நலம் பெற்று வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிகை. மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
புரோகிதராக வந்த விநாயகர்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊரிலிருந்து 7 கி.மீ., தொலைவிலுள்ள ஆறுமுகமங்கலத்தில் விநாயகருக்கென தனிக்கோயில் உள்ளது. இவர் ஆயிரத்தெண் விநாயகர் என்றழைக்கப்படுகிறார். சுமார் 2000 வருஷத்திற்கு முன்னர் சோமார வல்லபன் என்று ஒரு ராஜா இங்கு ஆண்டுகொண்டிருந்தான். 1008 புரோகிதர்களை நர்மதா நதிக்கரையிலிருந்து வரவழைத்து, ஒரு பெரிய யாகம் நடத்த ஏற்பாடு செய்தான் . 1007 புரோகிதர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு புரோகிதர் வராததால் யாகத்தைத் துவங்க முடியாமல் வருந்தி நின்றான் மன்னன். எடுத்த காரியத்தை விக்னமின்றி முடிக்க உதவும் விக்னேஸ்வரனை மனம் உருக வேண்டினான். அரசனின் ஆசை நிறைவேற, விநாயகப் பெருமானே 1008-வது புரோகிதராக வந்து, யாகத்தையும் அன்னதானத்தையும் பூர்த்தி செய்தார். இதன் காரணமாக இந்த விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். விநாயகர் கோயில்களில் கொடிமரம் உள்ள கோயில் இது. சித்திரை பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளன்று தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அர்த்தநாரீஸ்வரர் கோவில்
தேன் அபிஷேகத்தின்போது சிவலிங்கத்தில் தெரியும் அம்மன்
விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு இடை நெளித்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களைக் காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிசேக பூசையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக காட்சி தருகிறார். மற்ற அபிசேகம் நடக்கும் போது இலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்
திருவிடைக்கழி,சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம்.இறைவர் திருப்பெயர் காமேசுவரர். இறைவியார் திருப்பெயர் காமேசுவரி. முருகனின்திருப்பெயர் சுப்பிரமணிய சுவாமி. இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது.கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்.இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கு உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.
கடம்பவனநாதர் கோவில்
ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களில் ஒரு நடராஜர் சிரசில் பிறை சூடி இருக்கிறார். ஆனால் அவர் பாதத்தில் முயலகன் இல்லை. இதில் ஒரு நடராஜருக்கு உத்திராயணத்திலும் மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.
ரங்கநாதர் கோவில்
தேங்காய்க்கு பதிலாக தேங்காய் துருவல் படைக்கப்படும் திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்து கோவிலில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.
வெயிலுகந்த விநாயகர் கோவில்
சூரியன் வழிபட்ட விநாயகர்இக்கோவில் மூலவர் விநாயகர்
மீது வருடம் முழுவதும் சூரிய ஒளி படுவதால் இவருக்கு வெயிலுகந்த விநாயகர் என்று பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி- மார்கழி) தெற்கு பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை-ஆனி) வடக்கு பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன. ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் முதலில் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கித்தான் சென்றார். உப்பூர், தொண்டியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 29 கிமீ தொலைவில் உள்ளது .
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் முக்தி தரும் தலம்
மயில் வாகனன் முருகன், வள்ளி, தெய்வயானை இல்லாமல் தனித்துக் காட்சி தரும் கோலத்தில் மயில் மீது அமர்ந்திருக்கையில், மயிலின் முகம் நேர்கொண்ட பார்வையில் காணப்படும். வள்ளி தெய்வ யானையுடன் முருகன் அமர்ந்திருக்கும்போது மயிலின் முகம் வலப்புறமாக நோக்கி யிருக்கும். வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வயானையுமாய்க் காட்சி தரும் முருகனைத்தான் கோயில்களில் பெரும்பாலும் காண முடியும். போகவாழ்வு தரும் முருகனின் கோலம் இது. ஆனால் வலப்புறம் தெய்வயானையும் இடப்புறம் வள்ளி என்ற கோலத்தில், ஞானியர்க்கு முக்தி தரும் மூர்த்தியாகக் காட்சிதரும் முருகனாக வயலூர் சுப்பிரமணிய சுவாமி விளங்குகின்றான்.
கொற்றவாளீசுவரர் கோவில்
வயலுக்கு காவலாக நின்ற அம்பிகை
ஒருசமயம் கோவிலூர் தலத்தில் சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். அங்கே, அவளது மகள் வடிவில், கோவிலூர் தலத்து அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.
ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கைசிக ஏகாதசியான நவம்பர் 15 அன்று நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம் நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி விழா
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதனை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது, மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால், வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி பெருமாள் அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில், இன்று(14.12.2021) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் போகிப்பண்டிகை நாளில் ஏகாதசி வருவதால் இந்த ஆண்டு கார்த்திகையிலேயே பரமபதவாசல் திறக்கப்படுகிறது. இப்படி கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடப்பது, சுமார் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமையும்.
அஸ்திரபுரீஸ்வரர் கோவில்
சங்கீத விநாயகர்
செங்கல்பட்டு அருகில் உள்ள ஆனூர் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது, அஸ்திரபுரீஸ்வரர் கோவில், இத்தலத்து இறைவன் அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால், இங்கே குடி கொண்டுள்ள ஈசனுக்கு அஸ்திரபுரீஸ்வரர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. இக்கோவிலின் மதிலில் சங்கீத விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த விநாயகர் அமர்ந்த நிலையில் வலக்கையால் தொடையில் தாளம் போடும் பாவனையில் அருள்கிறார். இவரை தொடர்ந்து ஏழு நாள்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சங்கீதக் கலையில் சிறப்படையலாம் என்பது நம்பிக்கை.
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
சயனகோலத்தில் நரசிம்மர்
பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சிதருகிறார். திருமாலின் கோவில்களில் இந்தக்கோவிலில்தான் நரசிம்மர் சயன கோலத்தில் இருக்கிறார். இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார். தாயாருடன் எழுந்தருளியதால் இது போக சயனம் ஆகும் . சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிங்கர்குடி ,பூவரசன்குப்பம் ,பரிக்கல் ஆகிய நேர்கோட்டில் உள்ள நரசிம்மர் தலங்களை வணங்கும்போது, இத்தலத்திற்கு வந்து இவரையும் வணங்குவது சிறப்பாகும் .