திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோவில்
சிம்ம குரு தட்சிணாமூர்த்தி
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருப்புலிவனம். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அபிதகுசாம்பாள், மூலவர் சுயம்பு மூர்த்தி. ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. சிவலிங்கத் திருமேனியில், புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது.இப்படி ஜடாமுடி தரித்த சிவலிங்கத் திருமேனியை நாம் திருவையாறு, சிவசைலம் ஆகிய ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த அம்சம் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு 'சிம்ம குரு தட்சிணாமூர்த்தி' என்று பெயர். தட்சிணாமூர்த்தியின் அருகில் சனகாதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார். அதனால் இவரை அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கின்றனர். இந்தப் பெயருக்கு காரணம், இவருடைய இடது கால் அம்மனின் வாகனமான சிம்மத்தின் மீதும், வலது கால் நடராஜப்பெருமானுக்கு இருப்பதுபோல் முயலகன் மீது உள்ளதாலும், ஆகும்.பெயருக்கு ஏற்றாற்போல், இவருடைய முகத்தில், ஆண்மையின் மிடுக்கையும் பெண்மையின் நளினத்தையும் நாம் காணலாம்.
சிம்ம ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலம் சிம்மராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. மன வேற்றுமை உடைய தம்பதியர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் இடையே ஒற்றுமை மேலோங்கும். இத்தலத்தை வழிபட்டால் திருமண வரம்,குழந்தை பாக்கியம், பதவி உயர்வு முதலிய நற்பலன்கள் கிட்டும்.
கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்
அங்க குறைபாடுகளை நீக்கும் தலம்
'மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், செவிடு, குருடு இன்றிப் பிறத்தல்' என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார். அதாவது மனிதன் உடலில் ஏதாவது ஒரு குறை என்று இருப்பது தவிர்க்க முடியாதது என்று கூறியிருக்கிறார். உடலில் குறையோடு பிறந்தவர்களுக்கு அருளும் தலம் தான் கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்.கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்றால், அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது கூனஞ்சேரி.
அஷ்டவக்ர கீதை
அஷ்டவக்ர கீதை, பகவத் கீதையைப் போல மகாபாரதத்தில் அமைந்திருக்கிறது.சுமார் முன்னூறு சுலோகங்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் அஷ்டவக்ர மகரிஷி. ரமண மகரிஷி, விவேகானந்தர் உட்பட பல மகான்கள், இந்நூலில் பொதிந்துள்ள நற் கருத்துக்களினால், இந்த நூலை ஞான பொக்கிஷமாக கருதுகிறார்கள்.
அஷ்டவக்ர மகரிஷியின் உடல் குறைபாட்டை நீக்கிய தலம்
முற்காலத்தில் தானவ மகரிஷி என்கிற முனிவர் இருந்தார். அவர் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். சிவபெருமான் தானவ முனிவர்,தான் அறிந்த வேத மந்திரங்களைக் குழந்தைகளுக்குக் கற்பித்தால் மகப்பேறு வாய்க்கும் என்று அருளினார்.
அதன்படியே அவர், தன் வீட்டுத் திண்ணையில் குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். அவருடைய மனைவியும் கருவுற்றார். தாயின் கருவில் இருந்தபடியே வேதங்களைக்கேட்டு, வேத ஞானத்தை அறிந்து கொண்டது குழந்தை. அதுதான் பின்னாளில் அஷ்டவக்ர மகரிஷியாக அவதரித்த திருக்குழந்தை. ஒருநாள், தானவ முனி வேதபாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பில் ஒரு மாணவன் தூங்குவதைக் கண்டு அவனை எழுப்பி, கடுஞ்சொற்களால் திட்டினார். அப்போது, அவருடைய மனைவியின் வயிற்றில் கருவிலிருந்த குழந்தை, 'இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து இப்படி பாடம் நடத்திக்கொண்டிருந்தால், சிறு பாலகன் தூங்காமல் என்ன செய்வான்?' என்று கேள்வி கேட்டது. இதைக் கேட்ட முனிவர், அது தன் குழந்தை என்பதையும் மறந்து, 'பிறக்கும் முன்னரே, அதிகப் பிரசங்கித் தனமாக என்னைக் கேள்விகேட்ட நீ, கேள்விக்குறி போல வளைந்து அஷ்ட கோணல்களுடன் பிறக்கக் கடவது!' என்று சாபமிட்டார். பின்னர் , தானவ முனிவரின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை, பன்னிரெண்டு வகை ஞானங்களையும் பெற்று, பிறவியிலேயே ஞானயோகியாகப் பிறந்தது. ஆனால், தந்தையின் சாபத்தால் உடலில் எட்டுவித கோணல்களுடன், முதுகில் கூன், கை கால்கள் வளைந்து நெளிந்து திகழப் பிறந்தது. எட்டு வளைவுகளுடன் அக்குழந்தையின் உடல் இருந்ததால், அக்குழந்தைக்கு அஷ்டவக்கிரன் என்ற பெயர் சூட்டினார்கள் அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் அஷ்டவக்ர மகரிஷி என்ற பெயர் பெற்றது.
தான் கொடுத்த சாபத்தால் பாதிக்கப்பட்டு, தன் குழந்தை ஊனமாகப் பிறந்ததால் உண்டான வருத்தத்துடன் அரசவைக்குச் சென்ற தானவ மகரிஷி, அங்கே அரசவைப் புலவருடன் ஒரு வாதத்தில் தோற்க நேரிட்டது. இதனால் அவர் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் போனது.
சில வருடங்களில் நன்கு வளர்ந்த குழந்தை அஷ்டவக்ரன், தன் தந்தையைப் பற்றி தாயிடம் வினவினான். அவர், அரசவைப் புலவருடன் தன் கணவர் போட்டியிட்டுத் தோற்றுப் போன சம்பவத்தை மகனிடம் விவரித்தார். உடனே அரசவைக்குக் கிளம்பிப் போனான் அஷ்டவக்ரன். அங்குசென்று 'என் தந்தையுடன் யார் போட்டி போட்டது? அவரை என்னுடன் விவாதத்தில் பங்கேற்கச் சொல்லுங்கள்' என்று அந்த பாலகன் கூற, வியப்பின் உச்சிக்குப்போன அரசர், சிறுவனின் உறுதி கண்டு, விவாதப் போட்டி நடத்த சம்மதித்தார். பின்னர், ஆஸ்தான புலவருடன் போட்டி தொடங்கியது. அனைத்து விவாதங்களிலும்,அஷ்டவக்ரன் ஆஸ்தான புலவரை தோற்கடித்தான். அதிசயித்துப் போன மன்னர், பல பரிசுகள் வழங்கினார். பிறகு அஷ்டவக்ரன், தன் தந்தையை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான். அவனின் கோணலான உடலமைப்பைக் கண்டு கண்ணீர் வடித்த தானவ மகரிஷி, 'தான் கொடுத்த சாபத்துக்கு விமோசனம் கிடையாதா?' என்று இறைவனிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்தார். சிவபெருமான், அவருக்கு 'கூனஞ்சேரி என்ற தலத்தில் இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்களை பூஜை செய்து வந்தால், உன் மகனுடைய குறைகள் நீங்கும்' என்று அருள் வழங்கினார். இறைவன் அருளியபடி தந்தையும் மகனும் கூனஞ்சேரி வந்து, அஷ்ட லிங்கங்களைப் பூஜிக்க, அஷ்டவக்ரனின் கூனல் நிமிர்ந்தது; குறைபாடுகள் நீங்கியது. இதனால் இவ்வூருக்கு 'கூனல் நிமிர்ந்த புரம்' என்றும் பெயர் உண்டு'
அஷ்ட பைரவ லிங்க வழிபாடு
இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவை ஆகும். உடல் ஊனம், முதுகில் கூன் போன்ற குறைபாடுகளை உடையவர்கள், தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்கே வந்து நல்லெண்ணெயால் அஷ்ட பைரவ லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து, பின்பு விபூதியால் அபிஷேகம் செய்து எட்டு வகை மலர்களால் (மல்லி, முல்லை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, பச்சை, மரிக்கொழுந்து, தாமரை, செவ்வந்தி) அர்ச்சனை செய்ய வேண்டும். இங்கே அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் மற்றும் விபூதியை பக்தர்கள் வாங்கிச் சென்று, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்துக் குளிக்க வேண்டும். பின்பு அபிஷேக விபூதியைப் பூசிக்கொள்ள வேண்டும்.. இதுபோல செய்துவந்தால், அவர்களின் உடல் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் என்பது ஆதிகாலம் தொட்டுவரும் நம்பிக்கை. திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து, அங்கே இருக்கும் அஷ்ட திக்கு லிங்கங்களைத் தரிசிக்க முடியாதவர்கள், கூனஞ்சேரி வந்து இந்த அஷ்ட பைரவ லிங்கங்களை வழிபாடு செய்தால், அதே பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் குறைபாடு மட்டும் அல்லாது எந்தவித நோய்ப்பிணியும் இந்தக் கயிலாசநாதர் கோயிலுக்கு வந்தால் தீரும் என்பது நம்பிக்கை.
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது இத்தலத்தின் சிறப்பு.
வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்
சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.
காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.
ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், நடராஜப் பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்கு வீதியுலா வருவது வழக்கம். ஆனால்,ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக, ஒரு பரிசலில் எழுந்தருளியும், அவருக்கு முன்னால் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் இசை முழங்கிக் கொண்டு செல்ல, காவிரி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.
இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் கோவில்
ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கயம்பாளையம் அமைந்துள்ளது. இங்குதான் காவிரியின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். இக்கோவில் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் நட்டாற்றீஸ்வரரும், கீழ் தளத்தில் நல்லநாயகி அம்பாளும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை, சிவபெருமான்தென்புலம் அனுப்பினார். அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு, சிவபெருமான் அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார். ஒரு சமயம், அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியாக உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய, பாவம் போகும் என அகத்தியர் உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து காவிரியில் நடு இடத்தைத் தேர்ந்தெடுத்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து அகத்தியர் பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சி இறைவனுக்குப் படைத்தார். அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால், அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
பிராத்தனை
நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடல், வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
நடராஜர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் தேவாரத்தலம்
திருவள்ளூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேஸ்வரர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி. மார்கழி திருவாதிரை தரிசனம் சிறப்பாக நடைபெறும் தலங்களில் திருவாலங்காடும் ஒன்றாகும்.
வடாரண்யேஸ்வரர் கோவில், நித்தமும் நடமாடும் நடராஜ பெருமானுக்கு உரிய ஐம்பெரும் அம்பலங்களில் முதல் தலமாக, இரத்தின சபையாகத் திகழ்கிறது. அதனால் இத்தலத்தில், நடராஜப்பெருமானுக்கு ரத்ன சபாபதி எனும் திருநாமம். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள நடராஜப் பெருமானின் திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் நடராஜப்பெருமானுக்கு அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன.
பொதுவாக பெருமாள் கோயில்களில் தீர்த்தம் பிரசாதமாக தருவார்கள். ஆனால் இத்தலத்து நடராஜப் பெருமானின் சன்னதியில் தீர்த்தப் பிரசாதம் தருவது, இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் நடராஜப் பெருமான் தாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் மயக்கம் அடைந்தனர்.அவர்களது மயக்கத்தை தெளிவிக்க நடராஜப்பெருமான் கங்கை நீரை அவர்கள் மீது தெளித்தார். அதன் அடிப்படையில், இங்கு தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. மேலும், இந்திய தேசத்தின் வரைபடம் போல் நடராஜப் பெருமானின் திருவுருவம் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு என்கின்றனர்.
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.
ஒருமுறை காளிக்கும், சிவபெருமானுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது.
நடனக் கலைகளில் தேர்ச்சி பெற விரும்பும் அன்பர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் இத்திருத்தலமாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. காளியை வழிபாடு செய்த பின்னர் மூலவரை வழிபட்டால் முழுப்பயணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
பாம்பின் மேல் தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் அபூர்வக் கோலம்
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. இந்தக் கோவிலில் சிவன் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் நர்த்தனமாடும் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் முயலகன் மேல் காலை ஊன்றி தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் கோலத்தைத்தான் நாம் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், சர்ப்பத்தைக் காலடியில் போட்டு அதன்மேல் நின்று நடராஜப் பெருமான் ஆனந்தக் கூத்தாடும் கோலம், இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
முன்னொரு காலத்தில், மழவ நாட்டைச் சார்ந்த இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளுக்கு வலிப்பு நோய் எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்துபார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, சிவபெருமான் அருள்புரியும் கோவிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சிவபெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்துகொண்டு, இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். திருஞான சம்பந்தர், 'மங்கையை வாடவிடாதே, தையலை வாடவிடாதே, பைந்தொடியை வாடவிடாதே' என்ற ரீதியில் உள்ளத்தை உருக்கும் விதமாக பதிகங்களைப் பாடினார். அவர் சிவபெருமானை வேண்டி, 'துணிவளர் திங்கள் துலங்கி விளங்க...' எனும் பதிகம் பாடி, இத்தல இறைவனை வணங்க, வலிப்பு நோய் நீங்கி மன்னனின் மகள் குணமடைந்தாள்.
சிவபெருமான், மன்னன் மகளின் வலிப்பு நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நடராஜப் பெருமான் தனது திருவடியின் கீழ்
முயலகனுக்கு ப் பதிலாக, சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள சர்ப்பத்தின்மீது ஆடும் நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை பூசி வந்தால் நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெறலாம்.
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்
கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 7 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக தட்சிணாமூர்த்தி உள்ளார். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.
கருவறையில் தட்சிணாமூர்த்தி, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார். தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டும்தான்.
பொதுவாக எல்லாத் தலங்களிலும், கல்லால் ஆன ஆலமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். பக்தர்கள் இந்த ஆலமரத்தில் பிரார்த்தனையை கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும், மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
பிரார்த்தனை பலன்கள்
தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம். ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும்.
பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
கண் நோய்களை தீர்க்கும் அகத்தீஸ்வரர்
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில், சுமார் ஒன்பது கி.மீ. தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகே இருக்கிறது, பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. இறைவனார் பெயர் `பெருமுடி பரமேஸ்வரனார் என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்' என்றும், `அகத்தீஸ்வரமுடையார்' என்றும் பெயர்பெற்றார். இக்கோவில் ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது.
கருவறைக்குள் அகத்தீஸ்வரர் சாய்ந்த திருமேனியாக வடக்கே சாய்ந்து தென்கிழக்கைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால், கண் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட, சிவபெருமான் கண் நோய் தீர்த்த வரலாறு
இக்கோவில் இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன்பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
13-ம் நூற்றாண்டில் கூத்தன் என்னும் சிவபக்தன், இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். அவருக்கு நல்லமங்கை என்றுஒரு மகள் இருந்தாள். சிறுவயதில் அவளின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கிவிட்டது. கூத்தன் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பார்வை குறைபாடு சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் நல்லமங்கை பார்வை முழுவதையும் இழந்தாள்.
வெளியூர்களில் வாழும் பெரும் வைத்தியர்களிடம் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று கூத்தன் முடிவு செய்து, அதற்கெனப் பணத்தைச் சேர்க்கத் தொடங்கினான். கி.பி 1268, ஆண்டில், ஹொய்சாள மன்னன் ராமநாதன் இக்கோவிலில் திருப்பணி செய்ய ஆரம்பித்தான். அவனிடம் இருந்த நிதி தீர்ந்து விட்டதால், கோயில் வேலை அப்படியே நின்றுபோனது. இறைவனின் திருப்பணி நின்றுபோனதால் மனம் வருந்திய கூத்தன், தன் மகள் நல்லமங்கையின் கண் வைத்தியத்துக்கென வருடக்கணக்காக உழைத்துச் சேர்த்து வைத்திருந்த மூன்று கழஞ்சு பொன்னையும் கோயில் திருப்பணிக்குக் கொடை அளித்தான். அதனால் கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.
மகள் கண் வைத்தியத்துக்குச் சேர்த்து வைத்திருந்த பொன்னை, கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு விட்டதால் கூத்தன் வைத்திய செலவுக்கு மீண்டும் பணம் சேர்க்க வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி இத்தலத்து இறைவன் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் அருளால் நல்லமங்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெரிய ஆரம்பித்தது. சில நாள்களில் அவளுடைய கண்கள் பிரகாசமாகி முழுமையாகப் பார்வை திரும்பியது. கூத்தன் இறைவனுடைய அருளை நினைத்து நெக்குருகினான். தன் துயர் துடைக்க இறைவன் இருக்கும்போது தனக்குப் பணம் எதற்கு என்று முடிவுசெய்து அவன் சேர்க்கும் பணத்தையெல்லாம் இறைவனின் திருப்பணிக்கே வழங்கினான். இறைவனுக்கு கழஞ்சுபொன் பட்டம் செய்து சாற்றித் தன் நன்றியைத் தெரிவித்தான்.
இந்தப் பொன் கொடுத்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் வடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்
புதுக்கோட்டை - கீரனூர் சாலையில் அமைந்துள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் புலியாக வந்து, காமதேனுவின் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலத்து இறைவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி, ஒரு பாதி ஆண் தன்மையும், மறு பாதி பெண் தன்மையும் கொண்டு, சிவசக்தியாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் சதுர பீடத்தில் அமர்ந்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். இந்த அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி அபய வர ஹஸ்தங்களுடன், ஒரு கரத்தில் ருத்திராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார்.
இங்கு வந்து அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி பெருகும். தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோவில்
மகாலிங்க தலத்தின் பரிவார தலங்கள்
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் பிரகத் சுந்தரகுஜாம்பிகை.
இத்தலம் மகாலிங்கத் தலம் எனவும் இதனைச் சுற்றியுள்ள ஒன்பது தலங்களை இதன் பரிவாரத் தலங்கள் என்றும் சொல்வர். ஒரு சிவாலயத்தில் மூலவராக விளங்கும் லிங்கம், அவருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் நந்தி, சுற்றுப்பிரகாரத்தில் பிரதட்சணமாகச் சென்றால் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், சண்டேச்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. ஐதீகப் பிரகாரம் மூலவரைத் தரிசித்து வணங்கியபின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களைத் தரிசித்தால்தான் சிவதரிசனம் பூர்ணமாகப் பூர்த்தியாகும் என்பது நமது பண்டைய மரபு மற்றும் சாஸ்திரமாகும்.
இந்த ஆகம முறைப்படி, ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறை மகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் மூலவரான மகாலிங்கத்தை கர்ப்பக்கிரகமாக நோக்கினால், இவ்வாலயத்தின் ஏனைய பரிவார மூர்த்திகள் இருக்க வேண்டிய திசைகளில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திவ்ய ஷேத்ரமாக விளங்குவதைப் பார்க்கலாம். இவை அனைத்துமே ஆகம விதிப்படி எந்தெந்தப் பரிவார மூர்த்திகள் எந்தெந்தத் திசைகளில் இருக்க வேண்டுமோ, அவ்வூரில் உள்ள அந்த ஆலயம் அவ்வாறே விசேஷ தலமாக அமைந்திருக்கிறது. அந்த பரிவாரத் தலங்களும், அத்தலத்து மூர்த்தியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1 - நந்தி - திருவாவடுதுறை.
2- சோமாஸ்கந்தர் - திருவாரூர்.
3- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.
4 - விநாயகர் - திருவலஞ்சுழி.
5 - முருகன் - சுவாமிமலை.
6 - சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.
7 - நடராசர் - தில்லை.
8 - பைரவர் - சீர்காழி.
9 - நவக்கிரகம் - சூரியனார் கோயில்.
இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக விளங்குகிறது.
குத்தாலம் சோழீஸ்வரர் கோவில்
கையில் அமிர்த கலசத்துடன் காட்சி தரும் பாதாள சனீஸ்வரர்
கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. இறைவன் திருநாமம் சோழீஸ்வரர் . இத்தலத்தில் பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி என்ற திருநாமத்துடன் இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நிச்சயதார்த்தம் செய்த பிறகு, பிரச்னையின்றி திருமணம் நடக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். தீ தொடர்பான பணியில் இருப்பவர்கள் ஆபத்து வராமல் இருக்கவும், உஷ்ணத்தால் நோய் ஏற்பட்டவர்கள் நிவர்த்திக்காகவும் இங்கு வழிபடுகிறார்கள்.
அமிர்த கலச சனீஸ்வரர்
மகரிஷிகள், தேவர்கள் சிவனை வழிபட்ட தலம் இது. இவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, சனீஸ்வரர் அவர்களை கையில் அமிர்த கலசம் ஏந்தி வரவேற்றாராம். இந்த அமைப்பிலேயே காட்சி தருவதால் இவர் அமிர்த கலச சனீஸ்வரர் என்றும், பாதாளத்திலிருந்து சுயம்புவாக தோன்றியதால், பாதாள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.
இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பரிகார தலமென்பதால், இங்கு நவக்கிரக சன்னதி இல்லை.
சனிதோஷ பரிகாரத் தலம்
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட நளமகாராஜன், நிவர்த்திக்காக சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று, சுவாமியை வழிபட்டான். அவன் இத்தலம் வந்தபோது, இங்கிருந்த பாதாள சனீஸ்வரரையும் வணங்கி, தனக்கு அருளும்படி வேண்டினான். சனீஸ்வரர் அவனிடம் திருநள்ளாறு தலத்தில் தோஷ நிவர்த்தியாகும் என்று கூறியருளினார். மகிழ்ந்த நளன், திருநள்ளாறு சென்று தோஷ நிவர்த்தி பெற்றான். சனி தோஷ பரிகார தலமான இங்கு சனிப்பெயர்ச்சியன்று பரிகார மகா யாகம் நடக்கும். சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவரை வழிபட்டு வரலாம்.
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்
சகல தோஷங்களையும் விலக்கும் ஞானபைரவர்
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை.
காசி, காளஹஸ்தி, திருக்கைலாயம் போன்ற ஸ்தலங்களுக்கு சமமான தலம்தான் இந்த கீழமங்கலம் சிவாலயம் . சனி பகவானுக்கு குருவாக இருந்து உபதேசித்த ஞானபைரவர் காசியில் உள்ளார். அது போல இத்தலத்திலுள்ள ஞானபைரவர் எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் சிவாகமத்தை கையில் வைத்து சனி பகவானுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் உள்ளார். இங்கு மேற்கு திசையை நோக்கி சனி பகவான், கூப்பிய கைகளுடன் நின்ற கோலத்தில் தனது வலது காதால் தனது குரு, ஞானபைரவர் உபதேசத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த தலத்திற்கு வந்து வணங்கினால் காலத்திற்கும் சனியினால் வரக்கூடிய தீமைகள் வராது. என்றும் நன்மையே விளையும். ஏனெனில் இங்கு சனி பகவான் தனது குருவின் ஆணையை மீறி சிவபக்தர்களை தொந்தரவு செய்யமாட்டார். இத்தலத்தில் நித்திய சிவ அக்கினியுடன், ஜோதியுடன் இருப்பவர் பைரவர் மட்டுமே. அதனால் முதல் தீபம் இவருக்கு ஏற்றிய பிறகுதான் மூலஸ்தான சன்னதி மூர்த்திகளுக்கு தீபம் ஏற்ற வேண்டும். மடப்பள்ளியில் பிரசாதம் செய்வதற்கும் பைரவரிடம் இருந்துதான் அக்கினி எடுத்து செல்லவேண்டும். இந்த ஆலயத்தில் உள்ள ஞான பைரவர் சம கலைச் சந்திரனைச் சூடி இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும் அனைத்து கிரக தோஷங்களும் இத்தல ஞான பைரவரை வழிபட்டால் விலகும் என்பதால், இத்தலம் எல்லா தோஷத்திற்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
ஞானபைரவருக்கு ராகு காலம், எமகண்டம், தேய் பிறை அஷ்டமி போன்ற நாட்களிலும் சிறப்பு அபிசேகமும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையும் வெகு விமரிசையாக நடக்கிறது. அன்று மட்டும் சுமார் ஆயிரம் பக்தர்கள் வந்து, இத்திருக் கோவிலில் அருள் கடாட்சம் கொடுக்கும் ஞான பைரவரை வணங்கி நல்லருள் பெற்றுச் செல்கின்றனர்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh
2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை
https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w
3. அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்
https://www.alayathuligal.com/blog/yxaj24gw2t24a2hp7wxemwy49y2zs5
திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்
சக்தி தட்சிணாமூர்த்தி
சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள். இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர். இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.
இக்கோவிலில் சிவபெருமான், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் ஏடு மற்றும், அமுதக் கலசத்தை ஏந்தியபடியும், அம்பாளை அணைத்தபடியும் காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார். பிருகு முனிவர் சிவனையே மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒரு சமயம் சிவனைப் பார்க்க, இவர் கயிலாயம் சென்றபோது, ஈசன் பார்வதியுடன் அமர்ந்திருந்தனர். அருகில் சென்ற பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கி அவரைச் சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதிதேவிக்கு கோபம் உண்டானது. இவர் தன்னையும் சேர்த்து வணங்கவேண்டும் என்று கூறி ஈசனுடன் நெருங்கி அமர்ந்தார். பிருகு முனிவர் வண்டு உருக்கொண்டு, சிவனை மட்டும் சுற்றி வந்தார். அப்போது ஈசன், சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக, தன்னின் இடபாகத்தை சக்திக்கு அளித்தார். இவ்வடிவமே அர்த்தநாரீஸ்வரர் கோல வடிவம். இக்கோலத்தைக் கண்டும் பிருகு முனிவர்க்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. பிருகு முனிவர் பூலோகத்தில் சிவத் தல யாத்திரை மேற்க் கொண்டபோது, கள்ளி வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூசித்த சுவாமியை கள்ளிச்செடியிலுள்ள மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது ஈசன் அவர் முன் தோன்றி, சிவமும் சக்தியும் ஒன்றே! சக்தி இல்லாமல் சிவம் இல்லை. சிவம் இல்லாமல் சக்தியும் இல்லை. என்று உபதேசத்தைக் கூறிவிட்டு, அம்பாளை தன் மடியில் அமரவைத்து சக்தியுடன் இணைந்த தட்சிணாமூர்த்தியாக காட்சி கொடுத்தார்.
இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்து நலன்களையும் அடையலாம். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவில்
வேற்று மதத்தினரும் செவ்வாய் தோஷம் நீங்க வழிபடும் தேவாரத் தலம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள தேவாரத் தலம் சிறுகுடி. இறைவன் திருநாமம் சூட்சுமபுரீஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை, தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு மங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோவில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.
தல வரலாறு
ஒருமுறை கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில் பார்வதி பெற்றி பெற்றாள் அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார் கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான காட்சி கொடுத்து அவளை மீண்டும். ஏற்றுக்கொண்டதாக தல புராணம் கூறுகிறது. கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, 'சிறுகுடி' என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால், அபிஷேகம் செய்வதில்லை. மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது.
செவ்வாய்தோஷ நிவர்த்தி தலம்
செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாக விளங்குகின்றது. பெரும்பாலும் மாங்கல்ய தோஷம், கடன்தொல்லை, பயம், சண்டை சச்சரவு, வாகன விபத்து, ரத்தம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பு, தீயினால் ஏற்படும் காயங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக சுவாமி இருக்கிறார்.
புதிதாக வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து செல்கிறார்கள். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்களும் தாங்கள் கட்டும் வீடு மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மங்களாம்பிகை ஏற்படுத்திய மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்களநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.
செவ்வாய்தோஷம் உடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் வந்து வணங்கவேண்டிய கோயில் இது. வேற்று மதத்தினர்கள்கூட இங்கு வந்து செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவதைப் பார்க்கலாம்.
கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில்
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேஸ்வரர்
தஞ்சையிலிருந்து சாலியமங்கலம் வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் கோயில் வெண்ணி. இறைவன் திருநாமம் வெண்ணிகரும்பேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கரிகால் சோழன், பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி வாகை சூடிய இடம் என சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'வெண்ணிப் பரந்தலை' என்ற ஊர் இதுதான்.
கரும்பு கட்டாலான ஈஸ்வரர்
சோழ மன்னன் முசுகுந்த சக்கரவர்த்திதான் தேவேந்திரனிடமிருந்து தியாகராஜ சுவாமியைப் பெற்று வந்து திருவாரூரில் பிரதிஷ்டை செய்தவர். ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், 'இந்த இடம் கரும்புக் காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு' என்றும், மற்றொருவர், 'இல்லையில்லை. இது நந்தியாவட்டம் (வெண்ணி) நிறைந்த இடம். எனவே, நந்தியாவட்டம்தான் தல விருட்சம்' என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர். இவர்களுடைய விவாதத்தைக் கேட்ட மன்னர், 'இந்த இடத்தில் ஆலயமே இல்லையே. இவர்கள் இருவரும் தல விருட்சம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே!' என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. 'கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவட்டம்!' என்று இறைவனின் குரல் ஒலித்தது.சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் உடனடியாக அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, லிங்க பாணம் வெளிப்பட்டது. அப்படித் தோண்டும்போது மண்வெட்டியால் விழுந்த வெட்டுத் தழும்புதான் இப்போதும் அவருடைய திருமேனியில் காணப்படுகிறது. சக்கரவர்த்தி. லிங்கம் இருந்த இடத்தில், அடியில் தோண்டத் தோண்ட அந்த பாணம் போய்க்கொண்டே இருந்ததாம். எனவே, சிறிது உயரமாகவே கட்டலாம் என நினைத்து, 20 அடி உயரத்தில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.
கருவறையில் கரும்பே உருவாய் காட்சி தருகிறார் மூலவர். 'திருமேனி கரும்புக் கட்டுடைத்து' என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல், கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, சதுர் அஸ்த்ர (நான்கு மூலைகளை உடைய சதுர) வடிவமுடையது. இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது. மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம் கூட மூலவரின் திருமேனியை ஒற்றி எடுப்பதுதானாம்.
சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை
சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார். 'ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்' என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம்/சர்க்கரை கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை.
அமெரிக்காவில் மிக பிரபலமான, இதயநோய் நிபுணர் ஒருவர் சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து சென்றார். அமெரிக்கா சென்றதும் வழக்கமான சுகர் டெஸ்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, வழக்கத்துக்கு மாறாகக் குறைந்திருக்கின்றதென்று ரொம்ப ஆச்சர்யப்பட்டார்களாம். சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் கரும்பேஸ்வரரை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை அவர் எடுத்துக் கொள்கிறார் என்பது நம்பிக்கை.
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில்
11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சபை
திருவள்ளூலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பாசூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சிறப்பினை உடையது. 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருத்தலம் இரண்டாம் கரிகால்சோழனால் கட்டப்பட்டது. கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் சிலர் ஒரு பெரிய நாகத்தைக் குடத்தில் இட்டு அவனுக்கு அனுப்ப, இங்குள்ள வாசீஸ்வர சுவாமி பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம் இது என்கிறது கோயில் தலபுராணம்.
இந்தக் கோவிலின் கருவறையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாய் சதுர வடிவ ஆவுடையாரோடு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமான் சந்நிதிக்கு வலப்புறமாக அம்பாள் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் என ஒரே வரிசையில் சிவபெருமான் குடும்ப சமேதராக காட்சி அருள்கிறார்.
பிரச்னைகள் தீர்க்கும் மாலைப் பிரார்த்தனை
இங்கு சிறப்பு அம்சமாக ஒரு சந்நிதியில் 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. இந்த விநாயகர்களுக்குத் தேங்காய் மாலை , வாழைப்பழம், அருகம்புல் மாலை ஆகியன சமர்ப்பித்துப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் எந்தத் துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ வழி செய்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கல்யாண தடை, குழந்தையின்மை, குடும்பச் சிக்கல்கள் முதலிய பிரச்னைகளுக்கு 11 நெய் தீபம் ஏற்றி 11 தேங்காயை மாலை, 11 வாழைப்பழ மாலை, அருகம்புல் மாலை ஆகியனவற்றை இங்குள்ள விநாயகருக்கு சாத்தி வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது நம்பிக்கை.
வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய சிவபெருமான்
திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.
அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.
அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.
திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்
சனி பகவான் குடும்ப சமேதராய் காட்சியளிக்கும் அபூர்வத் தோற்றம்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநறையூர் ராமநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தனி.
தசரதர் தனக்கு ஏற்பட்ட நீண்ட கால நோய் தீர, இத்தல இறைவனையும், சனி பகவானையும் வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். இது ராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது என்கிறார்கள்.ராவணனிடம் போரிட இலங்கை செல்லுமுன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும், தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர், தீர்த்தக்குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.
இந்த ராமநாத சுவாமி கோவில், சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவிலாக கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். இவர்களை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார், தசரதர்.சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. மூலவருக்கு கொடிமரம் இல்லாமல் சனி பகவானுக்கு கொடிமரம், பலிபீடம் மற்றும் காக வாகனம் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.
ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட கால நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது. சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனி பகவானின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.
இத்தலத்தில் உள்ள திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில் பற்றிய முந்தைய பதிவு
மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்
https://www.alayathuligal.com/blog/mb5tbfg25mz9x8ldjdbnxaewpe5w4l
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில்
ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்
விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநாவலூர். இறைவன் திருநாமம் பக்தஜனேஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி அம்மை.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ், அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார். கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால் குருதட்சிணாமூர்த்தி என்று அழைக்கபடுவார். மேலும் படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் ஞானம் போதிக்கும் நிலையில், சின் முத்திரை தரித்த கோலத்தில் அவர் காட்சி கொடுப்பார்.
ஆனால், இக்கோவில் சன்னதியில் கோஷ்ட மூர்த்தியாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில், வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு அதிசயத்தக்கது. வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாதது.
சுந்தரர் பூராட நட்சத்திரத்தில் இங்கே இருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றுகொண்டார் என சொல்லப்படுகிறது. இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். எனவே இவரை பூராட நட்சத்திர அன்பர்கள் வழிபட்டால், அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
தினமும் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்
தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருநல்லூர் என்னும் தலம் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.
இத்தலத்து இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர்,தன் லிங்கத் திருமேனியின் நிறத்தை தினமும் பகல் பொழுதில், 5 முறை மாற்றி காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியின் நிறம் ஆறு நாழிகைக்கு(144 நிமிடம்) ஒரு முறை மாறுகிறது.முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறம், அடுத்த 6-12 நாழிகையில் இளம் சிவப்பு, அடுத்த 12-18 நாழிகையில் தங்கம், அடுத்த 18-24 நாழிகையில் நவரத்தின பச்சை, அடுத்த 24-30 நாழிகையில் இன்ன நிறமென்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.
சிவபெருமானின் சடாரி சாற்றப்படும் ஆபூர்வ நடைமுறை
பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
திருநல்லூா் கோவில் குளத்தின் தனிச் சிறப்பு
சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்
பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.
இக்கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு பழைய சோறு (அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம்) நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்
https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2
2. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85