௳ (முகப்பு)

View Original

வெக்காளி அம்மன் கோவில்

வெட்டவெளியில் அமர்ந்து பக்தர்களின் வேதனையை தீர்க்கும் அம்மன்

திருச்சி மாநகரின் மையப் பகுதியான உறையூரில் அருள்பாலிக்கிறாள் வெக்காளி அம்மன. உறையூர் பகுதியின் காவல் தெய்வமான அன்னை வெக்காளி அம்மன், முற்காலத்தில் சோழர்களின் இஷ்ட தெய்வமாகவும் விளங்கினாள். பொதுவாக ஆலயங்களில், மூலவரின் கருவறையின் மேல் விமானம் அமைந்திருக்கும். ஆனால், வெக்காளி அம்மன் வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள்.
வெக்காளி அம்மன் வெட்ட வெளியில் உள்ள ஒரு பீடத்தில் சாந்த சொரூபியாய் கருணை ததும்பும் முகத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். சிரசில் அக்னிச் சுவாலையுடன் கூடிய கிரீடமும்,, அதில் நாகமும் அமைந்துள்ளது. சிவந்த வாயில் துருத்திக் கொண்டிருக்கும் கோரை பற்களில் சீற்றம் கிடையாது. நான்கு கரங்களில், மேற்கரங்கள் இரண்டில் உடுக்கை, பாசம், கீழே வலது கரம் சூலம் ஏந்தியிருக்கிறாள். வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்த விதமாக காட்சி தருகின்றாள். பொதுவாக, இடது காலை மடித்து காட்சி தரும் கோலத்திற்கு மாறாக, வலது காலை மடித்து காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இது 'வீர ஆசனம்' என்று அழைக்கப்படுகிறது.

வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்தற்கான காரணம்

வன்பராந்தகன் என்னும் சோழ மன்னன் ஆட்சிக் காலத்தில், சாரமா முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபக்தரான இவர், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிகள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தாயுமான சுவாமிகளின் பூஜைக்கு என்று நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார்.
பிராந்தகன் என்னும் பூ வணிகன் இவரது நந்தவனத்து பூக்களை பறித்து அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை அறிந்த சாரமா முனிவர், மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னனோ முனிவரை அலட்சியம் செய்தான். பின்னர், முனிவர் தான் வணங்கும் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத் தாங்காமல், தாயுமான சுவாமிகள், அதுவரை கிழக்கு நோக்கி எழுந்தருளியிருந்த தன் நிலையை மாற்றி. மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.

சிவபெருமானின் கோபத்தினால் அப்போது உறையூரில் மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரனங்களும் தப்பியோடிப் பிழைக்க வழி தேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள தங்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனை தஞ்சமடைந்தனர்.

வெக்காளியம்மன் தாயுமானவ சுவாமிகளை வேண்டினாள். அதற்குப் பிறகு, மண் மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது. மக்களின் துயர் கண்டு வெக்காளியம்மன், ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன் என்று அருள் வாக்கு கூறினாள்.

அதனால்தான், அன்னை வெக்காளி, இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை, வெய்யில் இவைகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வருகிறாள்.

பொதுவாக ஒரு கோவில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு பரிகாரத் தலமாக விளங்கும். ஆனால் உறையூர் வெக்காளியம்மன் பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவளாகவும் அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவும் விளங்குகின்றாள். அம்மன் சன்னிதியின் எதிரே சூலங்கள் நடப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி அதனை அம்மனின் பாதங்களில் வைத்து எடுத்து, பின்னர் அதனை அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

திருச்சி நகரில் உள்ள அம்மன் கோவில்களைப் பற்றிய சில முந்தைய பதிவுகள்

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

காளிகா பரமேஸ்வரி கோவில்

திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சி தரும் அம்மன்
https://www.alayathuligal.com/blog/xj24l9lj3a6a89kl4gk4wgbhf8jpr7

சமயபுரம் மாரியம்மன் ‌கோயில்

மூலிகைகளால் ஆன சமயபுரம் மாரியம்மன் திருமேனி

https://www.alayathuligal.com/blog/28gw96fxpr4eww2x26srz8bp99gf2t

See this map in the original post