௳ (முகப்பு)

View Original

காஞ்சிபுரம் ஜுரஹரேஸ்வரர் கோவில்

உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களை தீர்க்கும் தலம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஜுரஹரேஸ்வரர் கோவில். இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரையும் வெப்ப நோய் தாக்கியது. வெப்பம் தாக்கியதில் அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் ஜுரம் ஏற்பட்டது போல் உடல் வெப்பம் மிகுந்து துடித்தனர். பின்பு சிவனை தேவர்கள் சரணடைந்த போது, சுரன் என்கிற அசுரனை அழித்து பின்பு காஞ்சி நகரில் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் லிங்க வடிவில் தான் கோவில் கொண்டுள்ளதாகவும், அந்த லிங்கத்தை வழிபட்டால் ஜுரம், காய்ச்சல் தீர்ந்து உடல் வெப்பம் தணியும் எனக் கூறி அருளினார் சிவபெருமான்.

சிவபெருமான் பைரவர், வீரபத்திரர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி என்பது போன்ற 64 வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அவற்றில் ஒரு திருமேனி வடிவம்தான் ஜுரஹரேஸ்வரர். இந்த வடிவில் சிவபெருமான் இரண்டு தலைகள், ஏழு கைகள், நான்கு கொம்புகள், மூன்று கால்கள் கொண்ட தோற்றத்தில் காட்சி தருகிறார்.

ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் போன்று இக்கோவிலிலும் பிரணவாகார விமானம் கோபுரம் இருக்கிறது. இந்த கோபுரத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல், ஜுரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று, வெளிச்சம் போன்றவை பக்தர்களின் காய்ச்சல் போன்ற பல நோய்களை போக்குவதாகக் கூறப்படுகிறது. கோவிலின் கருவறையில் கருங்கல்லாலான ஜன்னல் இருக்கிறது.

சிற்பக்கலை பொக்கிஷம்

மிகப் பழமையான கோவில் என்பதாலும் மிக அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாலும், இக்கோவில் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இக்கோவிலில் உள்ள சிரிக்கும் தோற்றத்தில் உள்ள நந்தி, கோவில் விமானம் மற்றும் கருவறையின் அமைப்பு, கோவில் விமானத்தின் அடிச் சுற்றில் உள்ள சிற்பங்கள், படிக்கட்டுகள், கோவில் விமானம் மற்றும் கருவறையில் உள்ள கருங்கல் ஜன்னல்கள் ஆகியவற்றின் அழகும், கலை நுணுக்கமும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். காஞ்சிபுரத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. இக்கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.

பிரார்த்தனை

ஜுரம், காய்ச்சல் போன்ற பல நோய்கள் தீர இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

ஜுரஹரேஸ்வர்

சிரிக்கும் தோற்றத்தில் உள்ள நந்தி

கருங்கல் ஜன்னல்

கருங்கல் ஜன்னல்

கருங்கல் ஜன்னல்

See this map in the original post