௳ (முகப்பு)

View Original

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

12 அடி உயர கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்

அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது

இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.

பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு

1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.

மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோவில் கட்டப்பட்டது.

பிரார்த்தனை

இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

See this map in the original post