௳ (முகப்பு)

View Original

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கத்து பெரிய கருடாழ்வார்

ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவைதான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோவில் பெரிதென்பதால் பெரிய கோவில் ஆயிற்று. கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர், திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். வாத்தியத்திற்கு பெரிய மேளம். பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து, அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

இந்த வரிசையில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில் அமைந்துள்ள கருடாழ்வார், பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இவ்வளவு பெரிய திருமேனியுடைய கருடாழ்வாரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் எட்டு விதமான நாகாபரணம் அணிந்துள்ளார். இந்த சிலை இறகுகளை விரித்து பறக்க தயாராக உள்ளது போன்ற நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் இவருக்கு கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் ஏற்படும் பாதிப்பை நீக்குபவர் இவர் என்பது ஐதீகம்.

கருடாழ்வார்

See this map in the original post