மரக்காணம் பூமீசுவரர்கோவில்
இரண்டு துவாரபாலகியருடனும், ஆறு கரங்களுடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இத்தலத்து இறைவன் திருநாமம் பூமீசுவரர். இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்’ என்று குறிப்பிடுகின்றன. 'எயில்' என்பதும், 'சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு 'எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டது. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மன், நான்கு கைகளுடன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் இரண்டு துவாரபாலகிகள் உடன் இருக்க, தலைக்கு மேல் குடையுடனும், ஆறு கரங்களுடனும் மகிஷாசுரன் மேல் நின்ற கோலத்தில் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.