மாயூரநாதர் கோவில்
மயிலாடுதுறை அபயாம்பிகை
அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.
கௌரி தாண்டவம்
அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இதனால் இத்தலம் 'கௌரி மாயூரம்' என்றும் பெயர் பெற்றது.
அபயாம்பிகை என்று பெயர் வரக் காரணம்
பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.
இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள். சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார்.
அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், 'மாயூரநாதர்' என்றும் பெயர் பெற்றார்.
சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள் பெற்றனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி அமைந்துள்ளது. மயில் வடிவில் சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர். பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள் சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.
இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அன்னை அபயாம்பிகை மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும் காட்சி தருகிறாள். தேவாரத்தில் இந்த அம்பிகையை அம்சலாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அழகிய சொற்களைப் பேசுபவள் என்பது பொருளாகும்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஆறாம் நாளன்று வெளியான பதிவு
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
https://www.alayathuligal.com/blog/3nxzzk82pts7skpe7ekkc3b8gagw82