சிவானந்தேசுவரர் கோயில்
முருகப்பெருமானின் தோஷம் நீங்கிய தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருப்பேணுபெருந்துறை.தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது.பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.
மூலவர் 'பிரணவேஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'சிவானந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. மூலவரின் சன்னதி முன்பு முருகப்பெருமான் சின்முத்திரையுடன், கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் இருக்கின்றார். பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டால் அதிலிருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை