ஆமூர் ரவீஸ்வரர் கோவில்
புதுமண தம்பதிகள் வணங்க வேண்டிய திருவதன தட்சிணாமூர்த்தி
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.
இத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள், திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். காலவ மகரிஷி, இத்தல ஈசனின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி, தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார். இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள் திருமகளை திருமணம் புரிந்த போது, லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும், பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அப்போது தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம். அந்த தெய்வீக காட்சியைக் கண்ட தேவர்கள் எல்லாம் மணம் குளிர்ந்து தட்சிணா மூர்த்தி, காலவ மகரிஷி, பெருமாள் தம்பதிகள் மேல் மலர்கள் தூவி வணங்கினார்கள். அன்று முதல் ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தி, திருவதன தட்சிணா மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருவதன தட்சிணா மூர்த்தியைப் போல பெருமாளும், லட்சுமி தேவியும் புன்னகை புரிய அப்போது தோன்றியதே பெருமாளின் அழகிய மணவாளன் தரிசனம். திருமணமானவர்கள் முதன் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே திருவதன தட்சிணா மூர்த்தி ஆவார். இங்கு தரிசனம் பெறும் புதுமணத் தம்பதிகளுக்கு மற்றோர் ஈடு இணையற்ற பாக்கியமும் காத்திருக்கிறது. தம்பதிகள் ஸ்ரீதிருவதன தட்சிணாமூர்த்தியையும், காலவ மகரிஷியையும் வணங்கும்போது அது குபேர திசையான வடக்கு நோக்கி அமைவதால் காலவ மகரிஷியின் 360 திருமகள் தேவிகளின் ஒருமித்த லட்சுமி கடாட்ச சக்திகளுமே அவர்கள் மேல் குபேர நிதியாக பொழியும்.