௳ (முகப்பு)

View Original

ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்

ஸ்ரீகாளஹஸ்தி ஞானப் பூங்கோதை அம்மன்

சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில். இறைவன் திருநாமம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர். இறைவியின் திருநாமம் ஞானப் பூங்கோதை. இந்த அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, வண்டார்குழலி என்ற பெயர்களும் உண்டு. 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞான பீடம் ஆகும். பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண(தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.

கயிலாச கிரி மலையடிவாரத்தில், சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்பாள் ஞானப் பூங்கோதை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பாள் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இடுப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில், மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால், இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தங்கப்பாவாடை சாற்றப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்றழைக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஞானப் பூங்கோதையை நேரிலோ, நினைத்தோ வழிபட்டால் அம்பிகையின் திருவருள் கைகூடி சகல அஞ்ஞானங்களும் நீங்கும். மேலும் ஞானகாரகனாம் கேதுவின் திருவருள் கிட்டும்.

நவராத்திரி மூன்றாம் நாளன்று வெளியான முந்தைய பதிவுகள்

 1. திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை (28.09.2022)

    https://www.alayathuligal.com/blog/h2w7tkec7jtjxc3xk75xzplmkdgdwn

  2. நாகை  நீலாயதாக்ஷி அம்மன் (08.10.2021)

  https://www.alayathuligal.com/blog/3d8ght8lka6dy92dbtp8rramxpfljr

See this map in the original post