மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
தன் பக்தையிடம் தங்கக் காசு மாலை கேட்ட மயிலை கற்பகாம்பாள்
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள், தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மிகவும் முக்கியமானது. மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்னும் சிறப்புடையது. மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று, தன் பக்தர்கள் தன்னிடம் வேண்டும் வரங்களை எல்லாம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம்.
இத்தலத்து இறைவி கற்பகாம்பாள், நான்கு திருக்கரங்களுடன் அபய-வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் அழகே உருவாகக் காட்சி தருகிறாள். வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங்களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. இந்தத் தங்கக் காசு மாலையின் பின்னணியில் அம்பிகையின் திருவிளையாடல் உள்ளது.
இக்கோவிலில் 1950-ம் வருடத்திலிருந்து, 'கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி' என்னும் பெண்கள் குழு அனுதினமும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம். இந்தக் குழுவிற்கு 'குரு பாட்டி' என்பவர் தலைவியாகவும், ஆனந்தவல்லி என்பவர் செயலாளராகவும் இருந்தனர். அனுதின பாராயணத்தைத் தவிர கோவிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில் அர்ச்சனை, அபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்து வந்தனர்.
1970-ல் ஒரு நாள் குரு பாட்டியின் கனவில் வந்த கற்பகாம்பாள், 'நீயும் உனது குழுவினரும் தினமும் எனக்கு சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறீர்கள். காசி விசாலாட்சிக்கும், காஞ்சி காமாட்சிக்கும் இருப்பதைப் போல் எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாம காசுமாலை வேணும்' என்று கேட்டாள். குரு பாட்டியும் தான் கனவில் கண்டதை தன் குழுவினரிடம் சொன்னாள். அனைவரும் நன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்கு அணிவிக்க முடிவு செய்தனர்.
வருடங்கள் பல சென்றும், குழுவினரால் காசு மாலைக்கு தேவையான பொருளை சேர்க்க முடியவில்லை. 1978-ல் குருபாட்டியும், ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்கள், இது பொருட்டு காஞ்சி மகா பெரியவரிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர். 'என்ன? காசுமாலைக்கு பணம் சேரலியா' என்று அவர்கள் முறையிடும் முன்னரே, மகா பெரியவர் கேட்டதால் அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ' கேட்டவள் அம்பிகை தானே. அதற்கு அவளே அருள் கொடுப்பாள். கவலைப்பட வேண்டாம்' என்று சொன்னார். மேலும் 'விசாலாட்சிக்கும், காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை; ஆனால் கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை' என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார். பிறகு ஆனந்தவல்லியிடமும் குரு பாட்டியிடமும் 'கற்பகம் சுவாசினி சங்கம் அப்பிடின்னு பேர்வச்சு, நிறைய சுவாசினி மற்றும் பாலா திருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்.
மகா பெரியவர் சொன்னதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால், பொன்னும் பொருளும் வந்து குவிந்தன. 1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது. ஒவ்வொரு தங்கக் காசிலும், காசின் ஒரு புறத்தில் சஹஸ்ரநாமாவளியின் ஒரு நாமாவும், மறு புறத்தில் கோவிலின் முத்திரையான சிவலிங்கத்தை மயில் பூஜை செய்வது பின்னணியில் அம்பாள் உருவமும் பதிக்கப்பட்டது. தங்க காசு மாலையும் உருவானது.
கற்பகாம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம தங்க காசு மாலையை சமர்ப்பிக்கும் விழா 26. 2. 1986 அன்று கொண்டாடுவது என்று முடிவானது.
ஆனால், 20-1-1986 அன்று ஆனந்த வல்லியின் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கை கால்கள் செயலிழந்து, பேச்சும் இல்லாமல் போனது. மருத்துவர்கள் , அதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்து விட்டனர். ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின் பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார். குரு பாட்டி சங்கத்தின் உறுப்பினர்களோடு காசு மாலையை எடுத்துக்கொண்டு பெரியவாளை தரிசிக்க மடத்திற்குச்சென்றார். இவர்கள் எல்லோரையும் பார்த்த மகா பெரியவர் , 'ஏன்? உங்க செயலாளர் வரலியா?' என்று கேட்க, இவர்களும் அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றி கண்ணீருடன் விவரித்தனர். காசுமாலையை பார்வையிட்ட மகா பெரியவர், 'மாலை சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த மாலையை கற்பகாம்பாளுக்கு போட, உங்க செயலாளர் உடன் இருப்பார். கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள் கொடுத்தார்.
அனைவரும் நேராக ஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர். என்ன ஒரு அதிசயம்! அதேநேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன், ஏதோ அற்புதம் நடந்துள்ளது என்று சொல்லி மறு நாளே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.
26-2-1986 அன்று நடந்த காசுமாலை சமர்ப்பண விழாவில், ஆனந்தவல்லி கணவரும் கலந்து கொண்டார். ஆனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்தி, அன்று காலையில் கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி, மாலையில் நடை பெற்ற கூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
மேலும், காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ் அலமாரியினையும் அளித்தார். தற்போதும், அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள், பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26 நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது.
நவராத்திரி முதல் நாளன்று வெளியான முந்தைய பதிவுகள்
1. திருக்கடையூர் அபிராமி அம்மன் (26.09.2022)
https://www.alayathuligal.com/blog/je8w6x2bmg4m79a474664mycrayb98
2. மயிலாப்பூர் கற்பகாம்பாள் (06.10.2021)
https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln