சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் கோவில்
எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலம்
திருக்கடையூருக்கு இணையாக ஆயுள் விருத்தி அளிக்கும் தலம்
சென்னை மாநகரின் ஒரு பகுதியான வேளச்சேரியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த தண்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கருணாம்பிகை.
முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது.
சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டிற்கிரங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார்.
வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் 'வேதச்சேரி' என்றழைக்கப்பட்டு, பின்பு வேளச்சேரி என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப் பெயராகும்.
திருக்கடையூரில், 16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற எமதர்மனை, சிவபெருமான் காலால் எட்டி உதைத்து தண்டித்தார். எமதர்மனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமதர்மன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அப்போது எமதர்மனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், 'தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
பிரார்த்தனை
எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மக்கள் அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள்.
வேலை இழந்தவர்கள், நல்ல வேலை கிடைக்க தண்டீஸ்வரரை வேண்டிக் கொள்கிறார்கள். .