உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில்
உலகின் முதல் வராகி அம்மன் கோவில்
காளியம்மன் போல் அமர்ந்திருக்கும் வராகி அம்மனின் வித்தியாசமான தோற்றம்
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சுயம்பு வராகி அம்மன் கோவில். இந்த வராகி அம்மனுக்கு மங்கை மாகாளியம்மன் என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படும் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலின் காவல் தெய்வம் இந்த வாராகி அம்மன். இந்த இரு கோவில்களும், சதுர் யுகங்களையும் கடந்த பழமையான கோவில்கள் ஆகும். 'மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ' என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும். எனவே இந்த வராகி அம்மன், உலகின் முதன்மையான வராகி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.
இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் முதலில் கோவில்கள்/ சன்னதிகள் ஏற்பட்டன. அவற்றில் மிக மிக பழமையானது தான் உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் கோவில்.
ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் சுயம்பு வராகி அம்மன், வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட, மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.
அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார். இப்படி விநாயகர் அருகில் இருக்கும் வராகி அம்மனை, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது
வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் பரிகாரம்
வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும். மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.
திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி வழிபடுவார்கள். அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.
பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது.
வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.