நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில்
குழந்தை வடிவில் இருக்கும் ஆஞ்சநேயர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் பால ஆஞ்சநேயர் கோவில் என்று பிரசித்தி பெற்றுள்ளது. கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவர் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கட்டியுள்ளார்.
ஒரு சமயம், துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள், தனது வியாச பூஜை மற்றும் சதுர் மாச விரதத்தைக் கடைப்பிடிப்பதற்காக திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தார். அங்கு வீர ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக, தன்னுடன் அந்த சிலையை எடுத்துச் சென்றார். ஆனால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அதனால், ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள் நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேய சிலையை நிறுவினார்,
கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர், வீர மங்கள ஆஞ்சநேயரின் தோற்றம், சிறு குழந்தையின் உருவத்தை ஒத்திருப்பதால் அவர் பால ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். அவர்,திருப்பதி வேங்கட நாதன் வீற்றிருக்கும் வடக்கு திசையை நோக்கி நடக்கும் பாவனையில் இருக்கின்றார். அவரது வலதுகரம் அபயமுத்திரை தாங்கியும், இடது கரம் தாமரை மலர் ஏந்தியும் காணப்படுகிறது. நரசிம்மரைப் போல் இவருக்கும் கோரப்பற்கள் உள்ளன. தலைக்கு மேல் செல்லும் அவரது வாலின் முனையில் ஒரு மணி தொங்குகிறது.
ஓட்டல் நிர்வாகியின் மூலம் தன் கோவிலை சீரமைத்த ஆஞ்சநேயர்
துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிதிலமடைந்தது. 1997-ம் ஆண்டு, தென்னகத்தில் பிரபலமாக விளங்கும் ஒரு ஹோட்டல் குழுமத்தின் நிர்வாகியின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, கோவிலை சீரமைக்கும்படி உத்தரவிட்டார். தன் நிர்வாகப் பணியிலே கவனம் செலுத்தி வந்த அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆஞ்சநேயரின் இந்த உத்தரவு அவருக்கு வியப்பளித்தது. அவருடைய முயற்சியால் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயரின் மிகப்பெரிய சுதை சிற்பம் நிறுவப்பட்டது.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தின் நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும்.